
சென்னையில் டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரமுள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி பாமக தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலை ஓரமுள்ள கடைகளை மூடகோரி உத்தரவிட்டது.
இதையடுத்து பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. ஆனால் சில இடங்களில் மதுக் கடைகள் மூடப்படாததைச் சுட்டிக்காட்டி மதுக் கடையில் பாமகவினர் நோட்டீஸ் ஒட்டி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை அசோக் நகரில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
இதேபோல், விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில், பாமக கிழக்கு மாவட்டச் செயலர் மொ.ப.சங்கர் தலைமையில் அக்கட்சியினர் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நோட்டீஸ் ஒட்ட முயற்சித்தனர்.
தகவலறிந்து அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களை மீறிச் சென்ற பாமகவினர் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் மதுக் கடை, கெடார் அருகேயுள்ள சூரப்பட்டு, அசோகபுரி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செட்டித்தாங்கல், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, செஞ்சி உள்ளிட்ட 17 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வலியுறுத்தும் துண்டு நோட்டீஸ்களை அந்தந்தக் கடைகளில் பாமகவினர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 387 பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.