
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமானவரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 7 ஆம்ஆ தேதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணியின்போது பணப் பட்டுவாடா புகார் காரணமாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், ரூ.89 கோடி பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
அதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 4 பேருக்கும் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தியது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 5 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா வருமான வரித்துறை ஆஜரானார். அப்போது சில கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் அளித்த சில தகவல்கள் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புது கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடை பெற்று வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.