கனிமொழி வீட்டில் கிடைத்தது என்ன..? தேர்தலை ரத்து செய்ய பயம் காட்டுவதாக கனிமொழி குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Apr 17, 2019, 6:57 AM IST
Highlights

சோதனை நடத்துவதை அறிந்த, திமுகவினர் கனிமொழி வீடு முன் கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கே பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

துாத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில், வருமான வரித்துறையினர்  நடத்திய சோதனைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
துாத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். நேற்று மாலை கோவில்பட்டியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் பங்கேற்ற கனிமொழி, பின்னர் தூத்துக்குடிக்கு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணி அளவில்  வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி  வீட்டுக்கு வந்தனர். அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனை நடத்துவதை அறிந்த, திமுகவினர் கனிமொழி வீடு முன் கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கே பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கனிமொழி வீட்டில் என்ன கைப்பற்றப்பட்டன என்ற விவரங்கள் அளிக்கப்படவில்லை.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “வீட்டுக்கு வந்த அதிகாரிகளிடம் சோதனையிடுவதற்கான உத்தரவுகள் இருக்கிறதா என்று கேட்டேன். ஆனால், அதற்கு அவர்கள் பதில் எதையும் சொல்லவில்லை. யாரை சோதனை செய்ய வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். வேட்பாளர் என்று சொன்னார்கள். பின்னர் சோதனை நடத்த முழு ஒத்துழைப்பு நடத்தினோம். என்னிடம் ஒரு ஆவணத்தில் கேட்கும் விஷயங்களை எழுதி தர சொன்னார்கள். இது சட்ட விரோதமானது.


சோதனைக்கு பிறகு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை குறி வைத்து ரெய்டு செய்கிறார்கள். தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகளோடு தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை கைகோர்த்துள்ளனர் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வேலூரில் தேர்தலை ரத்து செய்ததுபோல தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள். இங்கே போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை வீட்டில் கோடி கோடியாய் பணம் வைத்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். அங்கே சென்று நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.


வேலூரில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்த அடுத்த  நிமிடமே தூத்துக்குடியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கனிமொழி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

click me!