
நடிகர் விஷால் அலுவலகத்தில் இன்று மதியம் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் சென்னையில், வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் சேவை வரித்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விஷால், கடைசியாக துப்பறிவாளன் படத்தில் நடித்தார். தற்போது இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஏற்பட்டுள்ள மெர்சல் பிரச்னையில் குரல் கொடுத்தார் விஷால். அரசியல் ரீதியாக எழுந்த எதிர்ப்புக் குரல் பலரின் புருவத்தை உயர்த்தியது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சங்கங்களுக்குள் புகுந்து கொண்டு, அரசியல் ரீதியாக கருத்து கூறி வந்தார்.
மத்திய அரசு தொடர்பாக சில கருத்துகளைக் கூறி வந்தார். வருமான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் பேசி வந்தார் விஷால்.
இந்நிலையில் பட விநியோக வருவாய்க்கு சேவை வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்று விஷாலின் அலுவலகத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மதுரை, சென்னை வீடுகளிலும் சோதனையை சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் நடத்துவதாக முன்னதாக தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.