
அதிமுகவில் மனக்கசப்பு சிலரிடம் இன்னும் இருக்கிறது எனவும் அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள கோபதாபம் போன்று கசப்புணர்வு உள்ளது உண்மைதான் எனவும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக ஒபிஎஸ் சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் முதலமைச்சராக எடப்பாடியும் துணை பொதுச்செயலாளராக டிடிவியும் பொறுப்பேற்றனர்.
ஆனால் டிடிவியின் பொறுப்பற்ற தன்மையால் அவரை எடப்பாடி கட்சியில் இருந்து ஒதுக்க முடிவு செய்தார். மேலும் ஒபிஎஸ்சை இணைத்து கொண்டார்.
இதற்காக ஒபிஎஸ் விதித்த கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். ஒபிஎஸ் பிரிந்து செயலாற்றும் போது அவருக்கு உறுதுணையாக மதுசூதனன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்ட சீனியர் அதிமுகவினர் உடனிருந்தனர்.
இதைதொடர்ந்து எடப்பாடியுடன் இணைந்த பிறகு ஒபிஎஸ்சும் முனுசாமியும், மாஃபா பாண்டியராஜனும் மட்டும் பதவி வாங்கி கொண்டு அமைதியாக உள்ளதாக சலசலப்பு எழுந்தது.
மேலும் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே கூட மனகசப்பு இருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி, அதிமுகவில் மனக்கசப்பு சிலரிடம் இன்னும் இருக்கிறது எனவும் அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள கோபதாபம் போன்று கசப்புணர்வு உள்ளது உண்மைதான் எனவும் தெரிவித்தார்.
காலப்போக்கில் கசப்புணர்வு நீங்கி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.