
மெர்சல் திரைப்படத்தை, இணையதளத்தில் பார்த்ததாக கூறும் ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மெர்சல் படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுத்த ஹெச்.ராஜாவுக்கும், தமிழிசைக்கும் நடிகர் விஜய் நன்றி கடன்பட்டுள்ளதாகவும், டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
மெர்சல் திரைப்படம் வெளிவந்த நிலையில், படத்தில் இடம் பெறும் வசனங்களால் மேலும் சிக்கலை சந்தித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. குறித்தும், பண மதிப்பிழப்பு குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்து பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பலர், மெர்சல் படத்தில் இடம் பெறும் வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்தவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி. குறித்த கருத்துக்கு ஹெச்.ராஜா விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் விஜய், ஜி.எஸ்.டியை பற்றி ஒரு வார்த்தை கூறியதற்காக ஹெச்.ராஜாவும், தமிழிசை சௌந்தரராஜனும் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மெர்சல் படத்திற்கு அவர்கள் இருவரும் விளம்பரம் தேடித் தருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய் நன்றி கடன்பட்டுள்ளார்.
இணையத்தில், மெர்சல் திரைப்படத்தை பார்த்ததாக கூறும் ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தை மோடிதான் காப்பாற்றுகிறார் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, தமிழகத்தை மோடிதான் வழநடத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.