அவரு ஆட்சிக்கு வருவேன் என்பது கேலிக்கூத்து, அபத்தம்... கே.பி.முனுசாமி ஆவேசம்...!

By Asianet TamilFirst Published Jan 7, 2021, 9:27 PM IST
Highlights

கமல்ஹாசன் ஆட்சிக்கு வருகிறேன் என்று சொல்வது கேலிக்கூத்து. எம்ஜிஆர் உடன் தன்னை இணைத்து பேசுவது அபத்தம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் உழைத்து சம்பாதித்த ஊதியத்தை மக்களுக்காக கொடுத்து மக்கள் தலைவர் எனப் பெயர் பெற்றவர். ஆனால், கமல் இதுவரையில் மக்களுக்காக என்ன உதவி செய்துள்ளார்? புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலாவது மனிதநேயத்துடன் சிறு உதவியாவது செய்துள்ளாரா? இப்படிப்பட்ட கமல்ஹாசன் ஆட்சிக்கு வருகிறேன் என்று சொல்வது கேலிக்கூத்து. எம்ஜிஆர் உடன் தன்னை இணைத்து பேசுவது அபத்தம்.


திராவிட உணர்வுள்ள எந்த ஒரு தலைவரும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நிச்சயம் செயல்படமாட்டார்கள். அந்த அடிப்படையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை விமர்சனம் செய்ய மாட்டார். சில விஷமிகள் திட்டமிட்டு ஓபிஎஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோல் செய்து வருகிறார்கள். இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து விமர்சனம் செய்ததாக ஓபிஎஸ் மீது சமூகவலைத்தளத்தில் தவறாக பிரசாரம் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். வேண்டுமென்றே ஓபிஎஸ் பெயரை களங்கப்படுத்த சில இயக்கங்கள் இதுபோல் செயல்படுவதாக நினைக்கிறேன். அந்த இயக்கத்தை விரைவில் அடையாளம் காண்போம்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
 

click me!