ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு வஞ்சகம் செய்வது சரியல்ல.. திமுகவை சாடும் ஓபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Jul 2, 2021, 1:06 PM IST
Highlights

தடுப்பூசித் தொழிற்சாலை' என அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, இன்று 'தடுப்பூசி இல்லை' என்று திமுக அரசு கைவிரிப்பதைப் பார்க்கும்போது, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது. 

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளைப் பெற்று தமிழக மக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி', 'செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசித் தொழிற்சாலை' என அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, இன்று 'தடுப்பூசி இல்லை' என்று திமுக அரசு கைவிரிப்பதைப் பார்க்கும்போது, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு, அதில் எந்த நிறுவனமும் கலந்து கொள்ளாததையடுத்து, அந்தக் கொள்முதல் திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிக்கும் நவீனத் தொழிற்சாலை சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், அதனைத் தமிழக அரசிடம் ஒப்படைத்தால், தமிழக அரசு ஒரு தனியார் நிறுவனத்தை அடையாளம் கண்டு, பங்குதாரராக சேர்த்து, தடுப்பூசி தயாரிப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், எனவே, இதில் தாங்கள் உடனடியாக தலையிட்டு மேற்படி நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டு, இந்தியப் பிரதமருக்கு 26-05-2021 அன்று கடிதம் ஒன்றினை தமிழக முதல்வர் எழுதியிருந்தார். இன்றுவரை, இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று (ஜூலை 01) காலை நிலவரப்படி, ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் கிட்டத்தட்ட 16 கோடிக்கும் மேலாக தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், தமிழகத்தில் இதுவரை 1,56,42,773 தடுப்பூசிகள் தான் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. கொரோனா நோயினை ஒழிக்க, மூன்றாவது அலை வராமல் தடுக்க தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்று உலக சுகாதார அமைப்பு உட்பட அனைவரும் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் மீதமுள்ள 90 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்பது கேள்விக்குறிதான்.

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தை விட மிகக்குறைந்த மக்கள்தொகையை அண்டை மாநிலங்களான ஆந்திரப்பிரதேசத்தில் 1,57,04,570 தடுப்பூசிகளும், கர்நாடகாவில் 2,27,12,679 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் பாதி மக்கள்தொகையைக் கொண்ட கேரளாவில் கூட 1,40,96,824 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று, தெலங்கானா மாநிலத்தில் 1,10,71,480 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்கள்தொகைக்கேற்ப விழுக்காட்டின் அடிப்படையில் கணக்கிடும்போது, தமிழகத்தைவிட அண்டை மாநிலங்கள் அனைத்துமே அதிக அளவு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தடுப்பூசியை பெற்று அதனை அனைத்து மக்களுக்கும் விரைந்து செலுத்துவதில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறதோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுதவிர, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 38 மக்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு தக்க சமயத்தில் மக்களுக்கு வஞ்சகம் செய்வது போல் உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்குள்ளாவது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகத்தின் நிலையை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி, அழுத்தம் கொடுத்து, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளைப் பெற்று தமிழக மக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

click me!