3 ஆயிரம் ஏக்கர் மோசடி... சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தூசிதட்டும் திமுக..

By Raghupati RFirst Published Dec 24, 2021, 1:14 PM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுமார் 3  ஆயிரம் ஏக்கர் நில மோசடி நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுமார் 3  ஆயிரம் ஏக்கர் நில மோசடி நடந்துள்ளதாகவும், அந்த மோசடியை திமுக தூசி தட்டினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் தளைகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘பேசில் என்ற தனியார் நிறுவனம் குறைந்த விலைக்கு வீட்டுமனை வழங்குவதாகக் கூறி இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மோசடியாகப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து லோக்தா கமிட்டி கண்டறிந்து, அதனை சிபிஐ விசாரணை நடத்தி மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டு இருந்தது. அதனையும் மீறித் தமிழகத்தில் சில இடங்களில் நிலங்கள் விற்கப்பட்டு உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பதிவு செய்ததில் மோசடிகள் நடைபெற்று உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதுகுறித்து முழுமையாகக் கண்டறிய விசாரணை குழு அமைப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற உள்ளோம். விசாரணை கமிட்டியின் விசாரணையில், கடந்த ஆட்சியில் எந்த அரசியல்வாதிகளுக்கு, எந்த அதிகாரிகளுடன் தொடர்பு இருந்தது என்ற விபரம் முழுமையாகத் தெரிய வரும். 

இதேபோல வணிக வரித்துறையிலும் சில மோசடிகள் நடைபெற்றுள்ளன. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  வீடுகளில் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி வரும் சூழலில், இந்த மோசடி குற்றசாட்டை விரைவில் திமுக கையில் எடுத்தால், பல முன்னாள் அமைச்சர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

click me!