தூங்காத இரவுகள், பசிக்காத பகல்கள்: சசி டீமை வேட்டையாடி விளையாடும் ரெய்டுகள்...

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 12:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
தூங்காத இரவுகள், பசிக்காத பகல்கள்: சசி டீமை வேட்டையாடி விளையாடும் ரெய்டுகள்...

சுருக்கம்

IT dept targets Sasikala family in late night swoop on Jayas Poes Garden residence

தெய்வம் இப்போதெல்லாம் நின்று தண்டிப்பதில்லை! அன்றே தண்டிக்கிறது போல...என்று விரக்தியாய் சிரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

ஜெயலலிதா அ.தி.மு.க.வை ஆண்டபொழுதுகளில், சசிகலாவும் அவரது வகையறாக்களும் அதிகாரமையங்களாக இருந்த தருணங்களில் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு ஒவ்வொரு நாளும் நித்யகண்டம், பூரண ஆயுசுதான். எப்போது பதவி பறிபோகும், எப்போது பதவி வரும் என்று எவனுக்கும் தெரியாது. 

இதை மிக கிண்டலாக ‘காலையில் நமது எம்.ஜி.ஆர். பார்த்துட்டு நான் இன்னும் அமைச்சரா இருக்கேன்னு உறுதிபடுத்திக்கிட்டேன். நைட்டுல ஜெயா நியூஸ் பார்த்துட்டு என்னை இன்னைக்கு பதவியில இருந்து விடுவிக்கலைன்னு உறுதிப்படுத்திக்கிட்டு தூங்க போவேன்.’ என்பார்கள் சில அமைச்சர்கள். மாவட்ட செயலாளர்களுக்கும் இதே கதிதான். 

மன நிம்மதியோடு நாலு வாய் சாப்பிட முடியாது, படுத்த மாத்திரத்தில் கண் அயர்ந்து தூங்கிவிட முடியாது. எப்போதும் தலைக்கு மேல் ஒரு அரிவாள் தொங்கிக் கொண்டே இருக்கும். பொண்டாட்டி பிள்ளைக்குட்டிகளை கூட்டிக்கிட்டு பிக்னிக் போய் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ‘அண்ணே! உங்கள பதவியில இருந்து தூக்கிட்டாகண்ணே’ என்று இழவு போல் சேதி வந்து விழுந்து நெஞ்சை பிடிக்க வைக்கும். 

ஒரு உண்மையை சொல்வதானால் பல நிர்வாகிகளும்,  முக்கியஸ்தர்களும் இந்த டீமின் அதிரடியால் எப்போது பதவி போகுமோ எனும் பயத்தில் இயல்பாய் தூக்கம் வராமல் ராவானால் ‘ராவாக’ இறக்கிக் கொண்டுதான் தன்னை மறந்து உறங்குவார்கள். 
இப்படி ஆட்டி வைத்த சசி டீம் இன்று பழனி - பன்னீர் கரங்களால் எலிமினேட் ஆகும் நிலையில் எட்டிக் கிடக்கிறது. 

அந்த தண்டனை போதாதென்று கடந்த 10 நாட்களாக ரெய்டு பூதம் விரட்டி விரட்டியடிக்கிறது அவர்களை. இரவு பகலாக எந்த அதிகாரி எதை கேட்பாரோ? எந்த டீம் எந்த லிங்கை பிடித்து எந்த சொத்தை ஓப்பன் செய்வார்களோ? என்று பயந்தேதான் கிடக்கிறார்களாம். இரவில் நிம்மதியாய் தூங்க முடியவுமில்லையாம், பகலில் பசி எடுப்பதுமில்லையாம். எப்போதும் ஒரு டென்ஷன் மோடிலேயே வாழும் சசி வகையறா விசாரணை அதுயிதுவென அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுவதால்  நடுங்கிக் கிடக்கிறது. 

சசி, தினகரன், திவாகரன் போன்றோர்க்கு கூட அரசியலும், அது இழுக்கும் இழுப்புகளும் தெரியும். ஆனால் இளைஞரான விவேக்கிற்கு இதெல்லாம் புதிது. இத்தனை நாட்களாக தன் வீட்டில் நடந்த ரெய்டில் நைந்து கிடந்தவர், இந்த இரவு முதல் போயஸ் ரெய்டில் கேள்விகள், விசாரணைகளுக்கு இடையில் மூழ்க துவங்கியுள்ளார். 

ஜெயலலிதாவின் அதிகார நிழலில் ஆதிக்கம் செலுத்திய சசி வகையறாவை பார்த்து ‘என்ன வாழ்க்கைடா இவஙக்ளுக்கு!’ என்று ஒரு காலத்தில் கட்சியினர் புலம்பியிருக்கிறது. ஆனால் இன்றோ ‘ச்சே! என்ன வாழ்க்கடா?’ என்று தங்களில் நிலையை நினைத்து அவர்களே புலம்புகிறார்கள். 
விதி வலிது!

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!