
முதல்வர் பதவியை குறிவைத்து பன்னீர் அணி இயங்குவதாலும், அதை வீட்டுக் கொடுக்க எடப்பாடி அணி தயங்குவதாலும், அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
தினகரன், சுதந்திரமாக இருப்பதால்தான், அணிகளை இணைப்பதற்கு இடையூறாக இருப்பதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட பின்னரும், இணைப்பு பேச்சு வார்த்தையை இரு அணிகளும் முன்னெடுக்கவில்லை.
தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்ததும், அவர் கைது செய்யப்பட்டதும், மக்கள் மத்தியில் கட்சிக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளது என்று எடப்பாடி தரப்பினர் தற்போது கூற தொடங்கி உள்ளனர்.
மேலும், எக்காரணம் கொண்டும் பன்னீருக்கு முதல்வர் பதவியை விட்டு தர கூடாது, வேண்டுமானால் துணை முதல்வர் பதவியை அவருக்கு கொடுக்கலாம் என்று எடப்பாடி அணியில் உள்ள தங்கமணி கூறி வருகிறார்.
ஆனால், முதல்வர் மற்றும் பொது செயலாளர் பதவி பன்னீருக்கு இல்லாமல் அணிகளை இணைத்து எந்த பயனும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறி வருகிறார்.
பன்னீர் வீட்டில் நேற்று சந்தித்து பேசிய மூத்த தலைவர்கள், தினகரனை மட்டும் எடப்பாடி தரப்பினர் ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கவில்லை என்றால், இந்நேரம் அசிங்கப்பட்டு போயிருப்பார்கள் என்றும் கூறி இருக்கிறார்கள்.
பன்னீர்தான் முதல்வர், பொது செயலாளர் என்பதை எடப்பாடி தரப்பினர் ஏற்கும் வரை, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார் முனுசாமி.
நமது அனைத்து கோரிக்கையையும் அவர்கள் ஏற்பார்களா? என்று அதில் ஒருவர் கேட்க, இவ்வளவு நாளும், நாம் சொல்வதுதானே நடக்கிறது. இனியும் அப்படியே நடக்கும் என்று, நமட்டு சிரிப்புடன் அதற்கு பதில் சொல்லி இருக்கிறார் முனுசாமி.
பன்னீர் தரப்பினர், இவ்வாறு விடாப்பிடியாக இருப்பதால்தான், முனுசாமி உள்ளிட்ட நால்வர், அணிகள் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர் என்று எடப்பாடி தரப்பினர் குறை கூறி வருவதாக சொல்லப்படுகிறது.