
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை கதறடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள தமிழகம் தத்தளித்துக் கிடக்கிறது. முதல்வர், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பரபரப்பாக சுழன்ரு பணியாற்றி வருகின்றனர்.முதல்வர் தமிழகம் முழுவதும் சென்று நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்தையும் கண்காணிக்க அமைச்சர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பாரபட்சமின்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தங்களாலான கொரொனா ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது சொந்த பணத்தில் சேவை செய்து வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏ.,வான வானதிசீனிவாசன் கிருமி நாசினி இயந்திரத்தையும் , ஆவி பிடிக்கும் வாகனத்தையும் வழங்கி இருக்கிறார். கோவை அரசு மருத்துவமனைக்கு இரு இறுதி ஊர்வல வாகனங்களை வழங்கி இருக்கிறார். பல எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களை கொரோனா ஒழிப்பு மையங்களாக மாற்றி வருகின்றனர். களப்பணியாற்றி வருகின்றனர். நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் 39 எம்.பிகள் இருந்தும் அவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் வெளியில் தலைகாட்டவே இல்லை. கொரோனா குறித்து ஒரு சில எம்.பிக்களை தவிர பிறர் வாய் திறக்கவே இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களில் ஒருவர் கூட கொரோனா மையத்தைக் கூட ஆரம்பிக்கவில்லை. கொரோனா மையம் அமைக்க ஒரு திருமண மண்டபம் போதும். கிருமி நாசினி வழங்கக்கூடவில்லை. வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சமூகத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட தாமாக களமிறங்கி சேவை செய்து வருகின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.
கொரோனா ஆய்வு, ஆலோசனை என முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் உள்ளூர் எம்.பி.க்கள் என்கிற முறையில் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு பின் வரிசையில் நின்று தலைகாட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விடுவதாக இருக்கிறது அவர்களின் செயல்பாடுகள்.
மாநில அரசுகளே கொரோனாவை கவனித்துக் கொள்ளட்டும் என்கிற நினைப்பில் மத்திய அரசு இருப்பதால் அதே கொள்கையை எம்.பி.க்களும் கடைபிடித்து வருகிறார்களோ என்னவோ.? ஒரே ஒரு எம்.பியை தவிர தமிழகத்தில் மற்ற 38 எம்.பிக்களும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.,கள் தான். இப்போது மாநிலத்தை ஆள்வதும் அதே கூட்டணிதான். மக்கள் தேர்ந்தெடுத்ததால் தான் தாங்கள் எம்.பி பதவி வக்கிறோம் என்பதை மறந்துவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும். களப்பணியாற்ற வேண்டும். செய்வார்களா?