அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumar  |  First Published Jun 14, 2023, 8:07 AM IST

கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த  2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. 


தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த  2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில்,  சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி, அன்னராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை, கரூர் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில்  சோதனை மேற்கொண்டனர். அதில், மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மோசடி தொடர்பாக மூன்று வழக்குகள் பதியப்பட்டன. இந்த மூன்று வழக்குகளிலும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார், உதவியாளர் சண்முகம்,  போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க  போதிய ஆதாரம் இல்லை என கூறியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர்  தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் வேலைக்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி  ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில் இந்த லஞ்ச விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த  அனுமதிக்ககோரியும், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது எதிர்த்து அமலக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, பதிலளிக்க சென்னை குற்றப்பிரிவு காவல்துறை (job racketing wing),  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் சுரேந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் ரெஜினா மற்றும் கலாராணி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதேவேளையில் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கோடை விடுமுறை காலத்தில் ஓய்வு பெற உள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக விசாரணையை நடத்தவும், தேவைப்படும்பட்சத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்கலாம் என கூறப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இரண்டு மாதத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. 

அதேவேளையில் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலக்கத்துறை விசாரிக்க கோரி அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிய மனுவை முடித்து வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, கரூரில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!