கெட்டதிலும் ஒரு நல்லது இதுதானா..? இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் குவியும் இனிப்பு ஆர்டர்..!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 8:36 AM IST
Highlights

 குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆர்டரை வழங்கவும் அதன்மூலம் கமிஷன் அடிக்கவுமே டெண்டர் நிபந்தனை விதிக்கப்பட்டதாக சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார். 

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு நிறுவனமான ஆவினில் ஆர்டர் குவிந்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு, காரம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்காமல், வெளிச்சந்தையில் கடந்த காலங்களில் இனிப்புகள் வாங்கப்பட்டன. கடந்த ஆண்டுக்கூட போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இனிப்புகள் ரூ.500 என்ற வீதத்தில் வெளிச்சந்தையில் வாங்கப்பட்டது. இப்படி இனிப்பு வாங்கி இதன் மூலம் கமிஷன் அடித்ததாக அத்துறையின் சங்கங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் இந்த முறையும் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இனிப்புகளை வெளிச்சந்தையில் வாங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. 1.20 லட்சம் ஊழியர்களுக்கு இனிப்பு வாங்க, இனிப்பு நிறுவனம் ஆண்டுக்கு ரூ.100 கோடி விற்று முதல் செய்திருக்க வேண்டும் என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டது.  குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆர்டரை வழங்கவும் அதன்மூலம் கமிஷன் அடிக்கவுமே டெண்டர் நிபந்தனை விதிக்கப்பட்டதாக சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து அரசு துறை நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவும் துறை செயலாளர்களுக்குக் கடிதம் எழுதினார். அரசு ஊழியர்களுக்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்கும்படி அதில் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அரசு துறைகள், ஆவினில் தீபாவளி இனிப்பு ஆர்டர்களை கொடுத்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் ரூ. 3 கோடி ரூபாய்க்கு ஆவினில் ஆர்டர் குவிந்தது. 

இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் திருச்சியில் கூறுகையில், “கறந்த பால், கறந்தபடி தாய்ப்பால் போன்று சுத்தமான பாலில், கூட்டுறவு சங்கத்திலிருந்து பெறப்படும் பொருட்கள், ராஜஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து தீபாவளி இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறோம். சென்னையில் மட்டும் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது ஆவின் வரலாற்றில் உச்சம். தீபாவளி நெருக்கத்தில் விற்பனை அதிகரித்து 1,500 டன் விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டில் கிடப்பில் போடப்பட்ட இத்துறையில் தற்போது மீண்டும் வெளிநாடுகளில் விற்பனையை தொடங்கி உப பொருட்களை அனுப்பி வருகிறோம்.” என்று தெரிவித்தார். 

மேலும் அமைச்சர் நாசர் கூறுகையில், “பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கான நிலுவையில் உள்ள பணப்பட்டுவாடா செய்யப்படுவது ஒவ்வோர் ஆண்டும் நடப்பது வழக்கம். தீபாவளி திருநாளையொட்டி அந்தப் பணி தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. பால்வளத்துறையில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.
 

tags
click me!