மு.க.ஸ்டாலினுக்கு களங்கம் கற்பிக்க லாட்டரி பேச்சை பேசுவதா..? எடப்பாடியாரை ரவுண்டு கட்டிய திமுக அமைச்சர்.!

By Asianet TamilFirst Published Jul 26, 2021, 8:32 AM IST
Highlights

நிதிப் பேரழிவில் மாநிலத்தை அதிமுக விட்டுச் சென்றிருந்தாலும் அதைச் சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில்கூட லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்துக்குள்ளேயே இல்லை என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். 
 

நிதி நிலைமையைக் காரணம் காட்டி தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருடைய அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “லாட்டரி சீட்டை மீண்டும் திமுக அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என்று உண்மைக்கு புறம்பான ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


கொரோனா இரண்டாம் அலையைத் திறமையாகக் கையாண்டு தினமும் கடின உழைப்பால் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருவதற்காக இன்று அனைவராலும் பாராட்டப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது, லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டு பழனிசாமி இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறைகூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை.
இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும், சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்திவிட்டு சென்றிருந்தாலும் மாநில நிதி ஆதாரத்தை பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை. நிதிப் பேரழிவில் மாநிலத்தை அதிமுக விட்டுச் சென்றிருந்தாலும் அதைச் சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில்கூட லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்துக்குள்ளேயே இல்லை.” என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

click me!