
யூடியூபில் இப்போது கூட நீங்கள் அந்த காரசார வீடியோவை பார்க்கலாம். 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சட்டசபையில் தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு, எதிர்க்கட்சியாக அமர்ந்தது தே.மு.தி.க. ஆனால் அந்த நட்புறவு நெடுநாள் நீடிக்கவில்லை. சட்டசபையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையில் ஒரு நாள் பிரளயம் வெடித்தது. அப்போது பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா ’தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்கு முகம் மட்டும்தான். இதை சரித்திரம் சொல்லும்.’ என்று ஆவேசமாக சொல்லி அமர்ந்தார்.
உட்கார்ந்தது அவர் மட்டுமல்ல, அவர் சொன்னபடியே தே.மு.தி.க. உட்கார்ந்தது, சரிந்தது, படுத்தேவிட்டது. இதுதான் உண்மை..
கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் மிக மிக வீரியமான கட்சியாக இருந்தது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். அதற்கு ஒரே காரணம் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த். ‘கருப்பு எம்.ஜி.ஆர். மட்டுமல்ல இரண்டாம் எம்.ஜி.ஆரும் அவரே’ என்று புகழுமளவுக்கு வள்ளல் குணம் கொண்டவர். ஆனால் உடல் சுகவீனமடைந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக வீக் ஆக ஆக, அவரது கட்சியும் தேய்ந்து, கரைந்து, இன்று மிக பலஹீனமான நிலையில் உள்ளது.
தே.மு.தி.க. துடிப்போடு இருந்த காலத்தில், தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அக்கட்சி தனித்து நிற்கிறதா அல்லது யாரோடு கூட்டணி வைக்கிறது? என்று பரபரப்பாக பேசப்படும். போக்குவரத்து உள்ளிட்ட தொழிற்சங்க தேர்தல்களில் கூட தே.மு.தி.க. சங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று பார்த்தே மற்ற சங்கங்கள் முடிவெடுக்கும் நிலை இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாகிப் போயிருக்கிறது.
விஜயகாந்த் ஆக்டீவாக செயல்படாத நிலையில் அக்கட்சியை கையிலெடுத்த பிரேமலதா, தானும் ஜெயலலிதா போல் சாதிக்கலாம் என நினைத்தார். ஆனால், கூட்டணியை முடிவு செய்வதில் அவரும் அவரது சகோதரர் சுதீஷும் நடந்து கொண்ட விதங்கள் மிகப்பெரிய விமர்சனத்தை உருவாக்கின. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியா அல்லது அ.தி.மு.க. கூட்டணியா என முடிவு செய்யாமல் தே.மு.தி.க. தலைமை இழுத்தடித்தபோது ‘இவங்க கட்சியை வெச்சு வியாபாரம் பண்றாங்க’ என்று தொண்டர்கள் ஓப்பனாக வெடித்தது மிகப்பெரிய சிக்கலானது. கடைசியில் அ.ம.மு.க.வோடு கூட்டணி வைத்து, மிக மோசமான தோல்வியை இரு கட்சிகளும் சந்திக்கும் சூழல் வந்தது.
இதோ தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில். 234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் வெறும் 4 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வே தனித்து களம் காண்கிறது. ஆனால் வெறும் ஆறு வருடங்களுக்கு முன்பு அதே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க.வோ இன்று கூட்டணிக்கு தினகரன் கூட அழைக்காத நிலையில் இருக்கிறது.
பிரேமலதாவும், சுதீஷும் மிகப்பெரிய மன வேதனையில் இருக்கின்றனர். ஆனால்… பாவம் நடக்கும் விவகாரங்கள் எதையுமே புரிந்து கொள்ள இயலாத நிலையில் கேப்டன் சிறு குழந்தை போல் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் தன் இல்லத்தின் பிரதான அறையில்..!