
இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பி.எஸ்., சசிகலா தரப்பினர் உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இதில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6,000 பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் உறுதிப்பத்திரம் செய்துள்ளனர்.
43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, தமிழக அரசியல் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள், அனைவரும்
புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அணிகள் இணைப்பின்போது, பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விரைவில் நீக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் பொதுக்குழு கூட்டுவதாகவும் அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் இரண்டையும் மீட்டெடுக்கப்படும் என்றும் அப்போது
தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெற்று விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை இருவரும் திரும்பப் பெறுகின்றனர்.
தற்போது இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்து விட்ட நிலையில் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைக்க முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து நாளை டெல்லி செல்ல உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்., பிரமாணப் பத்திரத்தை திருப்ப பெறுவது, டிடிவி தினகரனுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.