Jai bhim: காலண்டர்லாம் ஒரு பிரச்சனையா.? இருங்க அடுத்து வருது பா.ரஞ்சித் படம்.. தெறிக்கவிட்ட சமுத்திரகனி.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 12:33 PM IST
Highlights

அதன்பொருட்டு ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இது போன்ற படைப்புகளை நாம் உருவாக்க முடியும். எந்த ஒருவரும் திட்டமிட்டு இதுபோன்ற எல்லாம் செய்ய மாட்டார்கள். 

சினிமாவால் மிகப்பெரிய சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை ஜெய் பீம் திரைப்படம் நிரூபித்துள்ளது என்றும், எனவே இதில் கேலண்டர் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்றும்,  ஜெய்பீம் போல இன்னும் நிறைய திரைப்படங்கள் வரப்போகிறது என்றும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். அடுத்து ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் வரப்போகிறது, பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சமுத்திரக்கனியின் இந்தப் பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிச்சட்டி காலண்டர் வைத்து தங்களது சமூகத்தையே இழிவுபடுத்திய விட்டதாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சமுத்திரக்கனி இவ்வாறு வெளிப்படையாக பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவரை எட்டி உதைப்பவர்க்கு 1 லட்சம் பரிசு தர தயாராக இருப்பதாக  பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் அதற்கு பொருப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதில் அவர்கள் திருப்தியடைய வில்லை என்றே கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனை இன்னும் முடிவின்றி தொடர்கிறது. இந்நிலையில் , திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி யூடியூப் சேனல் ஒன்றுக்கு இது தொடர்பாக காரசாரமாக பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், சினிமாவால் மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஜெய் பீம் திரைப்படம் நிரூபித்துள்ளது. சூர்யா அவர்களையும், ஞானவேல் அவர்களையும் வைத்து இது நிரூபிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் நான் இந்த படத்தை இப்படித்தான் பார்க்கிறேன். ஆனால் இங்கே பிரச்சனை, அங்கே பிரச்சனை என்பதையெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த படத்தால் ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாற்றத்திற்கான விதையான சினிமா இருந்திருக்கிறது. ஒரு படம் எடுக்கும் போது இந்தப் பிரச்சினை வந்து விடுமா! அந்தப் பிரச்சினை வந்து விடுமோ என்றெல்லாம் யோசித்து யோசித்து படமெடுத்தால் இது போன்ற மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்த முடியாது. 

மாற்றம் ஏற்படுத்த கூடிய திரைப்படங்களை எடுத்தால் நிச்சயம் பிரச்சனை வரும், அதை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கெல்லாம் தயாராக இருந்தால் மட்டுமே அதை நாம் செய்ய வேண்டும். பலர் இது போலதான் செய்து கொண்டிருக்கிறோம், இதற்கெல்லாம் துணிந்துதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பார்வை அதன் மீது விழுந்துள்ளது. அடித்தால் கேள்வி கேட்கவே ஆளில்லை என்ற ஒரு சமூகத்திற்கு இப்போது ஒரு சிறிய முகவரி கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் யாரும் செய்ய முடியாத ஒரு மாற்றத்தை இந்த திரைப்படம் செய்திருக்கிறது. அவ்வளவுதான். இதோடு இந்த பிரச்சினை முடிந்தது, அடுத்த பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும், இது போல் இன்னும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது, அந்த பிரச்சினைகளை நாம் பேச வேண்டும். இதுபோன்ற ஒரு பிரச்சனை முன்வைக்கப்பட்டால் உடனே அதை கவனித்து அதற்கு தீர்வு காண வேண்டிய அரசும் இப்போது இருக்கிறது, அதையும் நாம் பாராட்ட வேண்டும். இப்படி ஒரு புரட்சி நடக்கும் போது இங்கு காலண்டரை வைத்து விட்டார்கள். அங்கு காலண்டரை வைத்து விட்டார்கள், இதனால் இந்தப் பிரச்சினை வந்து விட்டது, அதனால் அந்த பிரச்சினை வந்து விட்டது என்றெல்லாம் பேசுவதற்கு நேரமில்லை. இன்னும் அடுத்தடுத்து பிரச்சினைகளை நாம் படமாக எடுக்க வேண்டி இருக்கிறது.

அதன்பொருட்டு ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இது போன்ற படைப்புகளை நாம் உருவாக்க முடியும். எந்த ஒருவரும் திட்டமிட்டு இதுபோன்ற எல்லாம் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு படைப்பாளியும் சர்ச்சைக்கான படம் எடுப்பதில்லை, ஒரு மாற்றத்திற்காக படம் எடுக்கிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் பா. ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் என்ற திரைப்படம் எடுத்து இருக்கிறோம், விரைவில் அதுவர இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள், அந்தப் படம் வேறு ஒரு தளத்தில் நிற்கிறது, அது வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது, இன்னும் இதுபோல நிறைய படங்கள் இருக்கிறது. அடுத்தடுத்து வர இருக்கிறது, அந்த படங்கள் எல்லாம் இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற தான் ஆசையில்தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் குறை சொல்ல வேண்டும் அவர்களை குறை சொல்லி நாம் மேலே வரவேண்டும் என்றெல்லாம் யாரும் படம் எடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!