விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா.? அரசிடம் கேட்டு சொல்லுங்க.. நீதி மன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 11:52 AM IST
Highlights

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று தெரிவிக்குமாறு தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று தெரிவிக்குமாறு தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் வரும் வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த வழக்கு இன்று பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுபவிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார். அப்போது ஆஜராயிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மத்திய அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவிலில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசின் கருத்தை பிற்பகலில் தெரிவிக்க அரசு  தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்று 1.30 மணிக்கு ஒத்தி வைத்தார்.
 

click me!