ஆம்பூர் என்ன வட இந்தியாவா.?? மாட்டுக்கறி பிரியாணி போடுங்க.. இல்லன்னா இலவசமா கொடுப்போம்.. சீறும் சிறுத்தைகள்.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2022, 2:14 PM IST
Highlights

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்பட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்பட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. ஆம்பூரில் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் பிரியாணி திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு  செய்துள்ளதுடன், அதில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இக் காட்சிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரியாணி என்பது துக்க நிகழ்வான எல்லாம் சரி, சுபநிகழ்ச்சி யானாலும் சரி எங்கும் வியாபித்திருக்கிறது பிரியாணி. தமிழ்நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் பிரியாணி பிரியர்களாக இருக்கின்றனர் என்றால் அது மறுப்பதற்கில்லை. இந்நிலையில் மனித ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் எல்லோரும்  ஓர் இடத்தில் ஒருங்கிணைந்து சாப்பிடும் வகையில் ஆம்பூரில் 13 14 15 ஆகிய மூன்று தினங்கள் பிரியாணி  திருவிழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்பை அம்மாவட்ட ஆட்சியர் அமரேஷ் குஷ்வாஹா விடுத்துள்ளார். ஆம்பூர் பிரியாணி என்பது இந்தியா முழுவதும்  பிரபல்யம், வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு வருபவர்கள் நிச்சயம் ஆம்பூர் வந்து பிரியாணி  சாப்பிட்டு விட்டு தான் செல்வர்.

பல மாநிலங்களிலிருந்து கூட வந்து ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி சாப்பிட வேண்டும் என்றும், ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் வகையிலும்  இப்பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. பொதுவாக சமூக வலைதளத்தை  திறந்தாலே ஆம்பூர் பிரியாணி  தொடர்பான வீடியோக்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்த பிரியாணி திருவிழா பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஆட்டுக்கறி பிரியாணி, முயல் கறி பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி போன்ற வகைகள் மட்டுமே இதில் கொடுக்கப்பட உள்ளதாம், ஆனால் ஆம்பூரில் பீப் பிரியாணி என்பது பிரபலம், ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில்  பீப் பிரியாணி தவிர்க்கப்பட்டுள்ளது. பிரியாணி திருவிழாவில் அமைக்கப்படவுள்ள ஸ்டால்களில் மற்ற வகையான பிரியாணிகளை விற்கலாம் ஆனால் மாட்டுக்கறி பிரியாணி மட்டும் விற்கக் கூடாது என மாவட்ட ஆட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆம்பூரில் மாட்டுக்கறி பிரியாணிக்கு தடைவிதிக்க ஆம்பூர் என்ன வட இந்தியாவா என்றும் பலர் ஆவேச்துடன்கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்ட போது தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. விசிக, திக, திராவிடர் கழகம், பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இலவசமாக மாட்டுக்கறி விருந்து வைக்கப்பட்டது. இந்நிலையில்  இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி தவிர்க்க படுவதன் மூலம் மீண்டும் உணவில் தீண்டாமை கடைபிடிக்கும் முயற்சி புகுத்தப்படுகிறது என்றும், மீண்டும் பாஜகவின் சித்தாந்தங்கள் நுழைக்கப்படுகிற முயற்சி நடக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எந்த உணவையும்  யாரும் சாப்பிடலாம், எதற்கும் தடையில்லை, அதேநேரத்தில் விருப்பமில்லாத உணவு யாரிடமும் திணிக்கவும் முடியாது என உள்ள நிலையில்  மாட்டுக்கறி பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெறவேண்டும், இந்த தடையை மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டுக்கறி பிரியாணியை இலவசமாக விநியோகம் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.  அதேபோன்ற அறிவிப்பை எஸ்டிபிஐ மற்றும் மனிதநேய மக்கள் கட்சியும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றும்  நிலை உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!