கருணாநிதியின் "ஸ்பை"யை நியமிக்க கூடாது! எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் 2 ஐ.பி.எஸ்கள்!

By sathish kFirst Published Sep 9, 2018, 1:13 PM IST
Highlights

புதிய டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த வாரம் சி.பி.ஐ அதிகாரிகள் தற்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து டி.ஜி.பி., ராஜேந்திரன் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் டி.ஜி.பியாக உள்ள ராஜேந்திரனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சி.பி.ஐ ஆயத்தமாகி வருகிறது.
   
பதவிக் காலம் முடிந்த நிலையில் பணி நீட்டிப்பு செய்து ராஜேந்திரன் டி.ஜி.பி பதவியில் உள்ளார். இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு டி.ஜி.பியாக சென்று ஆஜரானால் தமிழகத்திற்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு டி.கே.ராஜேந்திரன் விரைவில் டி.ஜி.பி பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. முதலில் பிரச்சனையை எதிர்கொள்ள தயாரான ராஜேந்திரன் தற்போது தனக்கு டி.ஜி.பி பதவி வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.


   
ஆனால் டி.ஜி.பியாக ஒருவரை தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு ராஜேந்திரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் புதிய டி.ஜி.பி நியமனத்திலும் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். தற்போது சென்னை காவல் ஆணையராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கிறார். இதனால் உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக விஸ்வநாதனை நியமித்துவிட்டு கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என்பது தான் எடப்பாடியின் திட்டம். 
   
இதற்கு முன்னதாக சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனும் இதே பாணியில் தான் சில காலம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். இதன்படியே விஸ்வநாதனை டி.ஜி.பியாக நியமிக்க எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும், ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும் விஸ்வாநதன் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாகிவிடக்கூடாது என்று காய் நகர்த்தி வருகின்றனர்.


   
அதிலும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அந்த அதிகாரி தற்போதைய டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு மிகவும் நெருக்கம். அவர் மூலமாக தற்போது டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை எப்படியாவது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இந்த முயற்சியை வலுப்படுத்தும் விதமாக டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஒருவரை புதிய டி.ஜி.பியாக நியமிக்காமல் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவரை நியமித்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்கிற ரீதியில் சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
   
அதாவது தற்போதைய ஆட்சியாளர்கள் குறித்து காவல்துறையின் உளவுத்துறை சேகரித்து வைத்துள்ள தகவல்கள் வெளியிடப்படும் என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்த தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தான் டி.ஜி.பி  ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்வதிலும், புதியவரை தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
   
இதனிடையே தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்ந்த ஜாஃபர் சேட் புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க ஆட்சியில் இருந்த போது சி.பி.ஐயின் நடவடிக்கைகளை கண்காணித்து உடனுக்கு உடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜாஃபர் சேட் அப்டேட் செய்து கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் சிக்காமல் தி.மு.கவால் தப்பிக்க முடிந்தது.
   
தற்போதும் சி.பி.ஐ தமிழக அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள ஜாஃபர் சேட் சரியான ஆளாக இருப்பார் என்று முதலமைச்சரிடம் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜாஃபர் சேட் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள். 

click me!