
கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டத்துக்கு மத்திய அரசு 1,230.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 14.9.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மத்திய அரசு இத்திட்டத்தை தமிழ்நாடு அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாகப் பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்தை 3,000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்கு முதலீடாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவின் அறிவிப்பை செயல்படுத்துவதற்காக, பி.எஸ்.என்.எல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25.4.2017 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் கண்ணாடி ஒளி இழை மூலம் இணைக்க ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 31.8.2017 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை, மேற்காணும் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து 1230.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக அரசின் சேவைகளை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.