உள்ளடி வேலை திமுக நிர்வாகிகளுக்கு கல்தா... அதிமுக- அமமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி... மு.க.ஸ்டாலின் அதிரடி

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2021, 3:31 PM IST
Highlights

அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, பதவி வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் பரவலாக வெற்றி பெற்ற திமுக கொங்கு மண்டலத்தில் ஓரிரு தொகுதிகளை தவிர பெருந்தோல்வியை தழுவியது. உள்ளாட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தில் பலப்படுத்தி ஆக திட்டமிட்டுள்ள தி.மு.க.,  அங்கு மாற்று முகாமிலிருக்கும் பலரையும் தங்கள் கட்சிக்கு இழுத்து வந்து கொண்டிருக்கிறது. அதேவேளை சட்டமன்ற தேர்தலில் கொங்கு பகுதியில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் ஆராய்ந்து வருகிறது. 

தற்போது மாற்று கட்சியினர்களான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம் ஆகியோர் திமுகவில் இணைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தை சேர்ந்த முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் பலருக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை கொங்கு பகுதியில் தி.மு.க.,வின் பலம், பலவீனம் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தனியார் நிறுவனம் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த தோல்வி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை அறிக்கையை அவர்கள் சபரீசனிடம் வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எதிராக செயல்பட்ட திமுக உடன்பிறப்புகளை நிர்வாக பதவியில் இருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக மாற்று கட்சியில் இருந்து திமுகவில் சமீபத்தில் இணைந்தவர்களுக்கு நிர்வாக பதவிகளை வழங்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொங்கு பகுதி உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளனர். 

 

click me!