
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக மட்டுமில்லாமல், தமிழக முதல்வராகவும் தடாலடி செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சியை பிடித்த சில வாரங்களுக்குப் பின், உளவுத்துறை போலீஸ் அவருக்கு ஒரு அறிக்கையை வைத்தது. அதில், ஏற்கனவே ஐந்து ஆண்டு காலம் ஆட்சி இல்லாததால் பணம் சம்பாதிக்க முடியாமலிருக்கும் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் பலர், மீண்டும் ஐந்து ஆண்டுகளுகு ஆட்சி இல்லை என்பதால் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்கள் இப்போதும் பணம் சம்பாதிக்கும் நோக்கில், காண்ட்ராக்ட்களை எடுப்பதற்காக அ.தி.மு.க.வின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை அப்ரோச் செய்துள்ளனர். இவர்களும் பெட்டிகளை வாங்கிக் கொண்டு, பல இடங்களில் தி.மு.க.வினருக்கு பல வகையான வசதி வாய்ப்புகளையும், சம்பாதிக்கும் வழிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர்! என்பதுதான்.
இதை வாசித்ததும், ஏற்கனவே சிவந்திருக்கும் ஜெ., செக்கச் சிவந்து போனார். தன் கட்சியின் எந்த நபர்களெல்லாம் இப்படி பணத்துக்காக தி.மு.க.வினரோடு அண்டர் கிரவுண்டு டீலிங்கில் உள்ளார்களோ அவர்களுக்கெல்லாம் அதிரடியாக பதவி பறிப்பு தண்டனையை வழங்கினார். ஆடிப்போனார்கள் அ.தி.மு.க.வினர்.
இப்போது அப்படியொரு சாட்டையடிக்குதான் தயாராகியிருக்கிறார் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். காரணம், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர்கள் போன்றோர் தங்களுக்கு கீழ் வரும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்றவற்றில் சீட் வழங்குவதில் பணத்துக்காகவும், சொந்த பகைக்காகவும் ஏகப்பட்ட சதிராட்டங்களை ஆடியுள்ளனர்.
நீண்ட நாள் கட்சியிலிருக்கும் உண்மை விசுவாசிகளை புறந்தள்ளிவிட்டு, தி.மு.க. ஆட்சி அமைத்த பின் அதில் இணைந்திருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி நபர்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துள்ளனர். தன்னை மீறி சீட் வாங்கி விட்ட சொந்தக் கட்சி நபர்களுக்கு அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த நிர்வாகிகளும் ஏகப்பட்ட பேர். தனக்கோ, தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கோ சீட் கிடைக்காமல் போன கோபத்தில் கட்சி பதவியை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிக்காக மறைமுக பிரசாரம் செய்தோர் பலர். சொந்த கட்சிக்காரனை தோற்கடிப்பதற்காக சோஷியல் மீடியா உள்ளிட்ட பல விஷயங்களை எதிர்க்கட்சியினரிடம் லம்பாக பணம் வாங்கிக் கொண்டு பயன்படுத்தியோரும் பலர். கணிசமான இடங்களில் பா.ஜ.க.வுக்கு கூட தி.மு.க.வினர் மறைமுகமாக வலுவான சப்போர்ட் பண்ணியுள்ளனர்.
சாதாரணமாக ஐம்பதாயிரங்களில் துவங்கி கோடிகள் வரைக்கும் தி.மு.க. நிர்வாகிகள் இப்படி சம்பாதித்துள்ளனர். ஆனால் இவர்களால் கட்சியின் வெற்றிகள் பல இடங்களில் கேள்விக்குறியாகவும், சவாலுக்கும் ஆளாகியுள்ளனர். சில இடங்களில் தோற்பதும் உறுதியாகிவிட்டது. இப்படி சொந்த கட்சிக்கு பச்சை துரோகம் செய்த நபர்களின் மொத்த விபரங்களையும் ஆதாரத்தோடு அள்ளி விட்டார் உளவுத்துறை போலீஸின் மூலம் முதல்வர்.
தேர்தலுக்குப் பின் சாட்டை சுழலும், பல தி.மு.க. முக்கிய புள்ளிகளின் பதவிகள் கழறுமாம்!