மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைக்கு மேல் கத்தி... தமிழக அரசின் அதிரடியால் கலங்கும் அதிமுக...!

By vinoth kumarFirst Published Jul 19, 2021, 3:17 PM IST
Highlights

டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் கூறி, 8 வார கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகவும், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில், வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின், இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் கூறி, 8 வார கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணக்கு தணிக்கை குழு அறிக்கை குறித்து விளக்கமளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்ததாக கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

click me!