இன்னோவா கார் டூ ஜீப்... தென்மாவட்டங்களிலும் தெறிக்கவிடும் எடப்பாடி பழனிசாமி..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2020, 3:11 PM IST
Highlights

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்மாவட்டங்களில், எதிர்பார்த்ததை விட கூடுதலான ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்மாவட்டங்களில், எதிர்பார்த்ததை விட கூடுதலான ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு மற்றும் மாவட்ட வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வந்தார். அண்மையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, முதல் தேர்தல் பிரச்சாரப் பயணமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு சென்றார். அங்கு அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் பெருமளவில் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதனால், முதல்வரும் வழக்கமாக பயணிக்கும் காரை தவிர்த்து, திறந்த வெளியிலான வாகனத்தில் பயணம் செய்தார். தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பிறகு, இந்த அளவிற்கு கட்சியினரிடையே எழுச்சியும், ஆதரவும் இருப்பதை கண்டு அவர் மிகவும் பூரித்து போனதாகக் கூறப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேற்று கலந்து கொள்ளச் சென்ற முதல்வருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சங்கரன் கோவிலில் நடந்த அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல விழாவில் கலந்து கொள்ள நெல்லை மாவட்டத்திற்கு மீண்டும் வந்தார். அங்கு இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் செல்லும் வழியான அழகியபாண்டிபுரம், தேவர்குளம், மானூர் என பல்வேறு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னோவா காரில் இருந்து இறங்கி திறந்த வெளியில் இருக்கும் ஜீப்பில் தொண்டர்களுக்கு கையை அசைத்தவாறே சென்றார். அதோடு, தன்னிடம் சால்வை உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுக்க வரும் நிர்வாகிகளை தடுக்க வேண்டாம் என்றும் பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் கிடைத்த எதிர்பார்க்க அளவிலான வரவேற்பும், ஆதரவும், கட்டாயம் தேர்தலில் பிரதிபலிக்கும் என முதல்வர் தரப்பினர் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!