இப்படி ஒரு விலைவாசி உயர்வு வந்ததில்லை !! கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு !! விழி பிதுங்கும் பொது மக்கள் !!

By Selvanayagam PFirst Published Jan 14, 2020, 9:18 AM IST
Highlights

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சில்லறை விலை உயர்வு  விகிதம் 7.35% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிக அளவாகும் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சில்லறை  விலை உயர்வு  விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016ல் இருந்தே இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலான விலைவாசி உயர்வு 2018 டிசம்பரில் 2.11 சதவிகிதமாகவும் 2019 நவம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாகவும் இருந்தது. இதுவே 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

இந்த அளவு என்பது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச விலைவாசி உயர்வான 6 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதையடுத்து பணவீக்கத்தை வரம்பிற்குள் வைத்திருக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு விகித அதிகரிப்புக்கு வெங்காய விலை உட்பட்ட முக்கிய காய்கறிகளின் விலையே முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதற்கு முன்னர், சில்லறை விலைவாசி உயர்வு அதிகபட்சமாக கடந்த ஜூலை 2014இல் 7.39 சதவிகிதமாக உயர்ந்தது. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (சிஎஃப்பிஐ) அல்லது உணவு விலைவாசி உயர்வு டிசம்பர் மாதத்தில் 14.12 சதவிதமாக உயர்ந்து நவம்பர் மாதத்தில் 10.01 சதவிகிதமாக இருந்தது.

விலைவாசி உயர்வு இப்படி அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி, அதன் அடுத்த இரு மாத நாணயக் கொள்கையை பிப்ரவரி 6ஆம் தேதி அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

click me!