திமுக-காங்கிரஸ் கூட்டணி: அழகிரி அறிக்கை எங்களை காயப்படுத்தியது... எரிமலையாய் வெடிக்கும் டி.ஆர். பாலு!

By Asianet TamilFirst Published Jan 14, 2020, 8:53 AM IST
Highlights

“ நாங்கள் தமிழ் நாட்டைப் பற்றிதான் கவலைப்படுவோம். தமிழ் நாடுதான் எங்களுக்கு முக்கியம். டெல்லி என்பது எங்களுக்கு தேநீர் கோப்பை அல்ல. அழகிரியின் அறிக்கையால் நாங்கள் வருத்தமடைந்தோம். உண்மையில் எல்லா மாவட்டங்களிலும் காங்கிரஸை மரியாதையோடுதான் நடத்தினோம்” என்று  டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். 

கூட்டணி தர்மத்துக்கு விரோதமான செயல் என்று எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்த பிறகு அந்தக் கூட்டத்தில் எங்களால் எப்படி பங்கேற்க முடியும்? என்று திமுக மூத்த  தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்விலும், காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை திமுக, ஒதுக்கவில்லை என்ற மன வருத்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமியும் திமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டனர். ‘திமுகவின் செயல் கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது” என்ற வார்த்தையோடு வெளியிடப்பட்ட அறிக்கை திமுகவை காயப்படுத்திவிட்டது.


இதனையடுத்தே குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக புறக்கணித்தது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கையே திமுக இக்கூட்டத்தைப் புறக்கணிக்க காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் திமுக இக்கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு விளக்கம் அளித்துள்ளார். 
இதுதொடர்பாக டி.ஆர். பாலு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “கூட்டணி தர்மத்துக்கு விரோதமான செயல் என்று எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்த பிறகு அந்தக் கூட்டத்தில் எங்களால் எப்படி பங்கேற்க முடியும்? அவருக்கு ஏதேனும் குறைகள் இருந்திருந்தால், அவர் நேரடியாக தலைவரை சந்தித்து முறையிட்டிருக்கலாம்.  அவர்கள் எங்களைப் பரிகாசிக்கின்றனர்.”
 அழகிரி அறிக்கை வெளியானவுடனே, அதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் இந்த விவகாரத்தை திமுக கொண்டு சென்றது. சிஏஏ-வுக்கு எதிரான கூட்டத்திலிருந்து தள்ளியிருப்பது என்பதையும் டி.ஆர். பாலு காங்கிரஸிடம் தெரிவித்துள்ளார்.  “அழகிரி அறிக்கை குறித்து அகமது பட்டேல் என்னிடம் பேசினார். இதுதொடர்பாக அழகிரி வருத்தம் தெரிவிப்பார் என்றும் கூறினார். ஆனால், அழகிரியின் அறிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய எதுவும் செய்யப்படவில்லை.” என்றும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.


அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் திமுக தலைமை நல்ல உறவில் உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கையை திமுக ஏன் சீரியஸாக எடுத்துக்கொள்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள டி.ஆர்.பாலு, “ நாங்கள் தமிழ் நாட்டைப் பற்றிதான் கவலைப்படுவோம். தமிழ் நாடுதான் எங்களுக்கு முக்கியம். டெல்லி என்பது எங்களுக்கு தேநீர் கோப்பை அல்ல. அழகிரியின் அறிக்கையால் நாங்கள் வருத்தமடைந்தோம். உண்மையில் எல்லா மாவட்டங்களிலும் காங்கிரஸை மரியாதையோடுதான் நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். 

click me!