தனிச்சின்னம் பிடிவாதம்... வெங்கய்யா நாயுடுவுடன் சந்திப்பு... திமுக கூட்டணி..! ஊசலாட்டத்தில் வைகோ..!

By Selva Kathir  |  First Published Jan 4, 2021, 9:46 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக தற்போது தனிச்சின்னத்தில் தான் போட்டி என பிடிவாதம் பிடிப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக தற்போது தனிச்சின்னத்தில் தான் போட்டி என பிடிவாதம் பிடிப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டும் தனிப்பெரும்பான்மை பெற முக்கிய காரணம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது தான். போட்டியிட்ட 234 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றாலும் 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. அதாவது அதிமுகவின் தொகுதி அடிப்படையிலான வெற்றி விகிதம் திமுகவின் தொகுதி அடிப்படையிலான வெற்றி விகிதத்தை காட்டிலும் குறைவு. ஆனாலும் அதிமுக வெற்றிபெறக்காரணம் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை தான்.

Latest Videos

undefined

மேலும் கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிகட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதற்கு காரணம் வலுவான இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் புதிய சின்னங்களால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட தோல்வியை தழுவியதால் அதுஅதிமுகவிற்கு சாதகமாக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலை உருவானது. இதனை தவிர்க்க இந்த முறை காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது.

துவக்கத்தில் இதைப்பற்றி விசிக பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் சின்னம் முக்கியம் இல்லை அதிமுக அரசை வீழ்த்துவது தான் குறிக்கோள் என்று திருமா கூறியிருந்தார். இதனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திருமா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்மையில் புதுச்சேரியில் பேசிய திருமாவளவன், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதே போல் வைகோவும் தனிச்சின்னம் என்பதில் உறுதியாக உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மதிமுகவிற்கு ஈரோடு என்கிற ஒரே ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்கியது. அந்த தொகுதியிலும் கூட மதிமுக வேட்பாளர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே அடிப்படையில் தற்போது சட்டப்பேரவை தேர்தலிலும் மதிமுகவிற்கு ஒதுக்கும் தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக 2 முறை வைகோ அறிவாலயம் சென்று பேசிவிட்டு திரும்பிய நிலையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அண்மையில் சென்னை வந்திருந்த வெங்கய்யா நாயுடுவை வைகோ நேரில் சென்று சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார். இது திமுக கூட்டணியில் பல்வேறு  கேள்விகளை எழுப்பியுள்ளது. தனிச்சின்னம் தொடர்பாக பிடிவாதம் பிடித்து வரும் வைகோ திடீரென வெங்கய்யா நாயுடுவை சந்தித்திருப்பது தங்களுக்கு தேர்தலில் வேறு சில வாய்ப்புகளும் உள்ளது என்பதை திமுக தரப்பிற்கு தெரிவிக்கவே என்கிறார்கள். அதே சமயம் தனிச்சின்ன விவகாரத்தில் வைகோ பிடிவாதம் பிடிப்பது கூடுதல் தொகுதிகளை கேட்கும் பேரம் தானே தவிர தனிச்சின்ன விவகாரத்தில் அவர் கடைசி நேரத்தில் விட்டுக் கொடுத்துவிடுவார், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே தான் நடந்தது என்று சுட்டிக்காட்டுகின்றனர் திமுகவினர்.

click me!