
ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் பெருத்த சந்தேகமே எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது.
இதையடுத்து அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் என 135 பேர் இதுவரை வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின் போது டிடிவி தினகரன் தரப்பு இரட்டை இலை சின்னத்தை கோரினார். ஆனால் ஒபிஎஸ் தரப்பும் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடியதால் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைதொடந்து தினகரன் தரப்பு தொப்பி சின்னத்தை கேட்டது. அதன்படி அவர்களுக்கு தொப்பி சின்னமே வழங்கப்பட்டது. அப்போது, தொப்பி சின்னம் அனைவரது மனதிலும் பதிய ஏராளமான பணத்தை வாரி இரைத்துள்ளார் டிடிவி.
ஆனால் பணப்புழக்கத்தை கண்டறிந்த தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஆர்.கே. நகர் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் தற்போது இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியுள்ள ஒபிஎஸ் இபிஎஸ் தரப்பு தொப்பி சின்னத்தையும் டிடிவிக்கு வழங்க கூடாது என தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் டிடிவி கடந்த முறை தந்த தொப்பி சின்னத்தையே இந்த முறையும் தாருங்கள் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தார்.
இதைதொடர்ந்து டிடிவி மட்டும் தொப்பி சின்னத்தை கோரினால் அவர்களுக்கு தருவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் ஆனால் பலர் தொப்பி சின்னத்தை கோரியுள்ளனர் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனால் குலுக்கல் முறையை தேர்வு செய்து அதில் யாருக்கு தொப்பி சின்னம் வருகிறதோ அவர்களுக்கே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே குலுக்கலில் சரியாக டிடிவி தொப்பி சின்னம் கிடைத்தால் உண்டு. இல்லையேல் தொப்பி கைநழுவி சென்று விடும் என்பதே நிதர்சன உண்மை...!