
உலகளவில் இந்தியா பின்தங்க பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், பீகார் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களே காரணம் என நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் தொடர்நது பின்தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக உலகளவில் இந்தியா பின் தங்க உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தான் காரணம் எனவும் அமிதாப் கந்த் கூறினார்.
தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் கற்றல் திறமை மோசமாக உள்ளதாகவும், 5-ஆம் வகுப்பு மாணவனால், 2-ஆம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை எனவும் அமிதாப் கந்த் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்ட அந்த 5 மாநிலகளிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் மட்டும் பாஜக கூட்டணி ஆட்சியில் நிதீஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.