எம்எல்ஏ விடுதியில் உள்ள அமைச்சரின் அறையில் சோதனை … வருமான வரித்துறை அதிரடி !! பணம் பறிமுதல் செய்யப்பட்டதா ?

By Selvanayagam PFirst Published Apr 15, 2019, 7:08 AM IST
Highlights

சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்ளிட்ட இடங்களில் நேற்று  நள்ளிரவில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்..

தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது. 

இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் விடுதிக்குச் சென்ற தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜேசுதாஸ் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எம்எல்ஏ விடுதியின் சி பிளாக் பகுதியில் 10-ஆவது மாடியில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்பட மேலும் சில எம்எல்ஏக்களின் அறைகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று இரவு 10.30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை முடிந்ததும், நள்ளிரவு 12.20-க்கு எம்எல்ஏக்கள் விடுதியிலிருந்து வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வெளியேறினர்.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த திடீர் சோதனையால் எம்எல்ஏக்கள் விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான பி.எஸ்.கே.பெரியசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

click me!