
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் அதிகாரிகளை மிரட்டியதாக வருமான வரி துறை போலீசில் புகார் செய்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், குவாரி உள்ளிட்ட 36 இடங்களில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சோதனையின்போது விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக நுழைந்த, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன்,தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், ஆவணங்களை கைமாற்றி அனுப்பியதும், கார் டிரைவர் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டங்களும், வீடியோக்கள் வடிவில் வலைத்தளங்களில் வலம் வந்தன.
இந்த நிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் வருமான வரித்துறை புலனாய்வுத் தலைவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி உள்ளார்.
ஏற்கனவே, அதிமுக அமைச்சர்களை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வரும் மத்திய அரசுக்கு, வருமான வரி துறையினர் அளித்துள்ள புகார் கூடுதல் வலு சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.