
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் தாளாளரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் வேறு கல்லூரியில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் அமைந்துள்ளது ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி இந்தக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு வேதியியல் பொறியியல் படித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் கல்லூரியல் நடக்கும் சீர்கேடுகள் சமூக வலைத்தளமான முகநூலில் பதிவு செய்ததாக தெரிகிறது.
அந்தப் பதிவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் திரைப்பட பாணியைப் போன்று இருட்டு அறையில் துணிகளை அவிழ்த்து அடிப்பதாகவும், மாணவிகளையும் அதுபோன்றே நடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கல்லூரியின் தாளாளரும் பங்காரு அடிகளார் மகனுமான செந்தில்குமார் மாணவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் கல்லூரி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்தவதாகவும், இதனால் புகார் தெரிவிக்க முடியாமல் பல மாணவர்களும் தங்கள் மனதுக்குள்ளே குமுறிக் கொண்டிருப்பதாகவும் முகநூலில் விஜய் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே முகநூலில் கல்லூரி குறித்து பதிவிட்டதற்காக மாணவன் விஜயை தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த சக்திக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் கல்லூரி குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இதுதான் நிலை என்றும் விஜயை அடித்து அனைத்து மாணவர்கள் முன்பும் அவர்கள் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலினால் காயமடைந்த மாணவன் விஜய் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே மாணவர் விஜயின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் தாளாளர் செந்தில்குமார், சக்திகண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, காயங்கள் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே மாணவன் விஜய்யின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை வேறு கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்ககோரியும்,கல்லூரி மீதான பல்வேறு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் டிராபிக் ராமசாமியின் மாணவியான பாத்திமா என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ,நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாணவன் விரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் மற்ற கோரிக்கைள் தொடர்பாக மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜுலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.