முதல்வர் வேட்பாளரை நீங்க முடிவு பண்ண முடியாது, நாங்க முடிவு பண்ணனும்..!! அதிமுகவை டரியல் ஆக்கிய பொன்.ஆர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2020, 4:57 PM IST
Highlights

அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என தற்போதைக்கு சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். தேர்தல் நேரத்தில் தான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்

தேர்தல் நேரத்தில்தான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும், எனவே தற்போதைக்கு அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என சொல்லத் தேவையில்லை என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒரு வழியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். இதனால் 2021 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை உறுதி அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், அதிமுக பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என தற்போதைக்கு சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். தேர்தல் நேரத்தில் தான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். எனினும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று நிலவிய குழப்பத்திற்கு சுமுகமான முறையில் முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளதையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.

ஆனால் தேர்தல் நெருக்கத்திலேயே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில்  அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்  என்று கூறியுள்ளார். 

 

click me!