தமிழர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலை வாய்ப்பு !! ராமதாஸ் அதிரடி வேண்டுகோள் !!

By Selvanayagam PFirst Published Jul 24, 2019, 10:40 PM IST
Highlights

தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழகர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. 

இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது  என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பா.ம.க. இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வெளிமாநிலத்தவருக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை விட கூடுதலாக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது.

எனினும், ஆந்திர மாநில மக்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்ற கோணத்தில் இது சரியான நடவடிக்கையாகும். புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும்.

ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப்பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டுவிட்டன.

சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெருநிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர். இப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என  தமிழக அரசு சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!