
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். இப்போது இதே வகையிலான இரண்டாவது ஊழல் வழக்கில் இன்று மீண்டும் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப் பட்டிருக்கிறார். ராஞ்சி சிறப்பு நீதிமன்றம், இது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப் படும் என்று ராஞ்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கப் பட்டதை அடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் வரிசையாக சில பதிவுகளை செய்தார் லாலு பிரசாத் யாதவ்.
அந்தப் பதிவுகளில், நீதி நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார்.
மேலும், உண்மையைப் பொய் போல் இருக்கச் செய்வதாக, அதை சித்திரிக்க முடியும். அரைகுறைப் பொய்களைக் கொண்டே திட்டமிட்ட பிரசாரத்தின் மூலம் முழுமையாக வீழ்த்த முடியும். எப்படி இருந்தாலும் முடிவில் நீதி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது பெரும்பாலான டிவிட்கள் ஹிந்தியில் இருந்தாலும், ஓரிரு ஆங்கில டிவிட்களின் மூலம் சர்வதேச தலைவர்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு டிவிட்டில், நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங், பாபா சாகேப் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தங்கள் முயற்சிகளில் தோல்வியுற்றனர். வரலாறு அவர்களை வில்லன்களாகக் காட்டியது. அவர்கள் இன்னமும் வில்லன்களாகவே உள்ளனர், இனவாத, சாதியவாத சிந்தனாவாதிகளால்! இதில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையை யாரும் எதிர்பார்க்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார் லாலு பிரசாத்.
லாலு பிரசாத் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால், அவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர் போலீஸார். அவர் விரைவில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்படவுள்ளார்.