2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய கூட்டணி - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

 
Published : Feb 26, 2017, 10:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய கூட்டணி - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

சுருக்கம்

In 2019 the National Coalition against the BJP in the elections

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய கூட்டணி அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

மகா கூட்டணி

கடந்த பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து அமைத்த ‘மகா கூட்டணி’ பா.ஜனதாவை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றது.

அப்போதே, தேசிய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் இடையே விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலார் சீதாராம் யெச்சூரி, சமீபத்தில் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினார்.

தேசிய கூட்டணி

தற்போது உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்படும் நாள் (மார்ச் 11) வருகிறது.

இந்த நிலையில், பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பது குறித்து சீதாராம் யெச்சூரி டெல்லியில் நேற்று ‘பி.டி.ஐ.’ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மதச்சார்பற்ற அரசு

‘‘பா.ஜனதா கூட்டணி அரசின் கொள்கைகள் மீதான மக்களின் அதிருப்தியை ஒருமுனைப்படுத்தி, பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும். கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஏன் என்றால், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டும் போதாது. 2019-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசு, மதச்சார்பற்ற அரசு பதவியேற்க வேண்டும். அதற்காக யாருடன் வேண்டும் என்றாலும் கை கோர்ப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை.

ஐக்கிய முன்னணி ஆட்சி

நான் சமீபத்தில் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசியபோது, பீகாரில் பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த ‘மகா கூட்டணி’ பற்றியும் ேபசினோம். இதுபோன்ற ஒரு கூட்டணியை கடந்த 1996-ம் ஆண்டிலும் நாம் பார்த்து இருக்கிறோம்.

(கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், தெலுங்கு தேசம், அசாம் கணபரிஷத், திவாரி காங்கிரஸ், 4 இடதுசாரி கட்சிகள், தேசிய மாநாடு மற்றும் மகாராஷ்டிரா கோமந்த கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைக்கப்பட்டது.)

பா.ஜனதா, 31 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை சேர்த்தாலும், 37 சதவீதத்துக்கும் சற்று அதிகமாகத்தான் வரும். அப்படியென்றால், 62 முதல் 63 சதவீதம் மக்கள் அவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ்

பா.ஜனதாவுக்கு எதிரான தேசிய கூட்டணியில் காங்கிரஸ் அல்லது திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் சேர்த்துக் கொள்வது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த யெச்சூரி, ‘‘தேர்தல் அரசியலைப் பொருத்தவரை முன்கூட்டியே முடிவு எடுக்கும் பதில் என்பது கிடையாது.

தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டும். அத்துடன் அந்த கட்சிகளின் கொள்கை மற்றும் திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.

உ.பி. தேர்தல் பிரசாரத்தில்

பா.ஜனதா இரட்டை வேடம்

உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.

‘‘பிரதமர் மோடி விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி குறித்து பேசுகிறார். ஆனால், பா.ஜனதாவின் மற்ற தலைவர்கள், ராமர் கோவில் விவகாரத்தையும், ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசி வாக்குகளை அடைய முயற்சிப்பதாக’’ யெச்சூரி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு