வௌவால்கள் மீது கை வைக்க நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா.!! சுற்று சூழல் ஆய்வாளர்கள் வெளியிட்ட பகீர்.!!

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2020, 11:41 AM IST
Highlights

பழங்களை உண்ணும் வெளவால்கள், 500 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களின், குறிப்பாக இரவில் மலரும் சில தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கும், விதைப்பரவலிலும் முக்கிய பங்குவகிக்கின்றன. 

கொரோனா தொற்றுநோய் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ‘விலங்குகளால்’ பரவும் நோய்கள் (Zoonoses) பேசுபொருளாகியிருக்கிறது.  எத்தனையோ அறிவியல் தொழில்நுட்பத்தில் நம் சமூகம் முன்னேறியிருந்தாலும் இன்றும் சாலையைக் கடக்கும் பூனைகளும் சுவரில் இருக்கும் பல்லிகளும் தங்கள் வாழ்வின் நல்லது கெட்டதைத் தீர்மானிக்கின்றன என்று நம்பும் ஒரு சமூகத்தில் உயிரினங்கள் சந்திக்கும் சிக்கல்கள் சொல்லிமாளாது. அதில் ஒன்றுதான் தற்போது வௌவால்,  கொரோனாவின் மொத்த பழியும் வௌவால்மீது விழுந்துள்ளது, வௌவால்களை அழித்தே ஆக வேண்டும் என இப்போது குரல்கள் எழுகிறது,  பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதும், விநோதமான உருவமும், மனிதனுக்கு பரிச்சயமில்லாத தன்மையும் வெளவால்களுக்கு இத்தகைய அவப்பெயரைக் கொடுத்திருக்கக்கூடும்.  இவ்வுலகில் பயனற்ற உயிரினம் என்று எதையும் ஒதுக்கிவிடவோ ஒழித்துவிடவோ முடியாதபடி, 

மனித வாழ்வு ஒவ்வொரு உயிரினத்துடனும் நுட்பமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவாடிகளான வெளவால்களின் அளப்பெரிய சூழல் முக்கியத்துவத்தைத் தெரிந்த எவரும் இதை மறுக்க முடியாது. இயற்கையின் இந்த நுட்பமான வலைப்பின்னலை நவீன மனிதர்களைவிட நன்கு உணர்ந்தவர்கள் செறிந்த அறிவு கொண்ட நம் பழங்குடியினர்தாம். சுற்றுச்சூழல் ஆர்வலரான இரவீந்திரன் நடராஜன் அவர்கள் வெளவால்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பளியர்கள் வெளவால்களை வளத்தின் குறியீடாகக் காண்பதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர், மிகப்பெரும் எண்ணிக்கையில் அந்தி வானில் கூட்டமாகப் பறக்கும் வெளவால் காலனியை ஒரு குறிப்பிட்ட பருவத்தில் காணமுடியவில்லையென்றால் பளியர்கள் அதைச் சாபமாகக் கருதுவதாகச் சொல்கிறார். பளியர்களின் மரபு அறிவில் விழைந்த வெளவால்கள் குறித்த நம்பிக்கையை நாம் அறிவியல் மொழியில் இன்னும் சிறப்பாய் விவரிக்க முடியும். 

வெளவால்களில், உருவத்தில் பெரிய பழம்தின்னும் வெளவால்கள் மற்றும் உருவத்தில் சிறிய பூச்சியுண்ணும் வெளவால்கள் என உணவின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. பூச்சியுண்ணும் வெளவால்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஓரிடத்தில் நிலைகொண்டிருக்கும் வெளவால்கள் எத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் பூச்சிகளை உண்ணும் என்று எண்ணிப்பார்த்தாலே அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். அதுமட்டுமின்றி பகலில் நடமாடும் பூச்சிகளைப் பறவைகள் கட்டுக்குள் வைத்திருக்க, இரவாடிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வெளவால்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. 

அடுத்ததாக பழங்களை உண்ணும் வெளவால்கள், 500 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களின், குறிப்பாக இரவில் மலரும் சில தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கும், விதைப்பரவலிலும் முக்கிய பங்குவகிக்கின்றன. இவற்றில் பல தாவரங்கள் வெளவால்கள் நுழைவதற்கென்றே அமைந்ததுபோன்ற விரிந்த பெரிய மணிவடிவிலான பூக்களைக் கொண்டுள்ளன. நம் நிலப்பகுதியின் முக்கிய பயிர்களான வாழை மற்றும் மாம்பழங்களின் மகரந்தச்சேர்க்கைக்குகூட வெளவால்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 

இவற்றில் எதையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயிரினத்தை நோய்ப்பரவலைக் காரணம்காட்டி அழிக்க முற்படுவது முட்டாள்தனமானது. வாழிட அழிப்பு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, பழத்தோட்ட உரிமையாளர்களால் கொல்லப்படுதல், ஓளிமாசு போன்றவற்றால் ஏற்கெனவே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளவால்களில் பல இனங்கள் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கின்றன. பழமுண்ணும் வெளவால்களில் பெரும்பாலானவை வருடத்துக்கு ஒரு குட்டி மட்டுமே ஈனுபவை.  குறைந்த எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும் உயிரினங்கள் எப்போதும் விரைவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளவை.இயற்கைக்கு மாறான ஒரு உயிரினத்தின் பெருக்கமோ இல்லை அழிவோ சூழலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நம்முன் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 

குறிப்பாக தவளைகளின் வீழ்ச்சி மிதமிஞ்சிய கொசுக்களின் பெருக்கத்தையும் அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் கொண்டுவந்துள்ளது போன்று, நரிகளின் அழிவு மயில்களைப் பெருக்கி விவசாயப் பயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கின்றது. 1950களில் சீனாவில் அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் அந்த நாட்டின் உணவு உற்பத்தியை எவ்வளவு மோசமாக பாதித்து பல உயிர்களை நாம் இழக்க காரணமாக இருந்தது என்பதை வரலாற்றின் சுவடுகள் நமக்கு உணர்த்துகின்றன.  இவ்வரிசையில் இன்று வெளவால்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதன் விளைவுகள் எங்கெங்கு என்னவாறு இருக்கும் என்று நாம் கண்டறிவது எளிதானதல்ல. ஆனால் அது நிச்சயம் விரும்பத்தகாத விளைவாகத்தான் இருக்கும் என்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும். 

எபோலா வைரஸ் தொற்றுக்கு வெளவால்கள் காரணமாகச் சொல்லப்பட்டதுபோன்று இன்று கொரோனா தொற்றுக்குக்கூட வெளவால்களோ அல்லது அலங்குகளோ (Pangolin) காரணமாகச் சுட்டப்படுகின்றன. எப்படி சிம்பன்சிகளைக் கொல்வது எயிட்ஸ் பரவலைத் தடுக்காதோ அதேபோன்று வெளவால்களையோ அல்லது அலங்குகளையோக் கொல்வது எந்த தொற்றுப் பரவலையும் தடுக்கப்போவதில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் காடுகளையும் விலங்குகளையும் ஆக்கிரமித்து அவற்றுடன் கொள்ளும் இயற்கைக்கு மாறான தொடர்பைத் துண்டிப்பதுதான். அதுமட்டுமன்றி காட்டுயிர்களை வேட்டையாடுவதும், கடத்துவதும், உண்பதும் உடனடையாக நிறுத்தப்பட வேண்டும் சுற்று சூழளை புரிந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  
 

click me!