கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்தால்...? அலறும் திமுக கூட்டணி கட்சி..!

By Asianet TamilFirst Published Mar 23, 2021, 9:11 PM IST
Highlights

பிரதமர் மோடி எந்த அளவுக்கு பிரசாரம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு எங்களுடைய வெற்றியின் எண்ணிக்கை கூடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இல்லை; கொத்தடிமையாக செயல்பட்டுகொண்டிருக்கிறது. பழனிசாமி, முதல்வர் பழனிசாமியாகவே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் மனசாட்சியாகப் பேசவில்லை. அவர் முதல்வராகப் பேசுவது இதுதான் கடைசி. எடப்பாடி பழனிசாமி யார் மூலம் முதல்வரானார் என்பதை நினைத்துப் பார்த்து பேச வேண்டும். கூவத்தூரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக இஸ்லாமிய மக்களுக்கு இணக்கமானதைப் போல் முதல்வர் பேசுகிறார். ஆனால், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்தது அதிமுகதான். தமிழகத்தில் அதிமுக - பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது. பத்தாண்டு கால அதிமுக அரசுக்கும் 7 ஆண்டு கால மத்திய பாஜக அரசுக்கும் எதிரான அலை இது. கருத்துக்கணிப்பில் எல்லாம் எங்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. கருத்துக்கணிப்பைவிட அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும்.
அனைத்துத் தொகுதிகளுக்கும் அதிமுக பணத்தை அனுப்பி வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால் அது ஜனநாயகப் படுகொலை ஆகும். தமிழக மக்கள் மோடியை விரும்பவில்லை. மோடி எந்த அளவுக்கு பிரசாரம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு எங்களுடைய வெற்றியின் எண்ணிக்கை கூடும்” என்று முத்தரசன் தெரிவித்தார்.

click me!