
அழகிரியும், ஸ்டாலினும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். ஆனால் தகப்பனையும், தனையனையுமே அங்காளி பங்காளியாக்கும் வல்லமையுடைய அரசியல் இவர்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன? சுலோச்சனா சம்பத் அ.தி.மு.க.விலும், அவரது மகன் இளங்கோவன் காங்கிரஸிலும் முட்டிக் கொண்டு நின்ற கதைகள் தெரியாதா தமிழகத்துக்கு? குமரி அனந்த காங்கிரஸிலும், அவரது மகள் தமிழிசை தமிழக பி.ஜே.பி. தலைவராகவும் கண்டும் காணாமலும் வலம் வரும் நிலையில் அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரையும் அரசியல் ஒரே கட்சிக்குள் பிரித்துப் போட்டிருப்பது ஒன்றும் அதிர்ச்சியுமில்லை, ஆச்சரியமுமில்லை.
தென்மண்டல அமைப்புச் செயலாளர் எனும் பட்டத்தோடு தென் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் வஸ்தாதுவாகதான் சில வருடங்களுக்கு முன்பு வரை வலம் வந்தார் அழகிரி. அவரை சுற்றிலும் கிங்கரர்கள் போல் ஒரு காவல் கூட்டம். மதுரையின் மாஜி துணைமேயர் மன்னன், நடுரோட்டில் பொளந்து கொல்லப்பட்ட பொட்டு சுரேஷ், சுரேஷை பொளந்த வழக்கில் உள்ளே இருக்கும் அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி, மாஜி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், முபாரக் மந்திரி, தளபதி, சோழவந்தான் வேலுச்சாமி என்று பெரும் கூட்டம்.
இவர்களை ஏதோ ‘பவுன்சர்கள்’ டைப் பாதுகாவலர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்கள் சிலர் கோடீஸ்வரர்கள். மற்றவர்களோ பெரும் லட்சாதிபதிகள். எம்.எல்.ஏ. அரசு காண்ட்ராக்டர், துணை மேயர், அரசாங்கை பி.ஆர்.ஓ.க்களின் கடிவாளத்தை கையில் வைத்திருக்கும் கிங், தென்னிந்திய கூலிப்படையினர் அத்தனை பேரின் ஜாதகத்தையும் அலசி வைத்திருக்கும் லோக்கல் தாதா என்று இவர்களின் ப்ரொஃபைல் ரொம்ப கெத்து.
இந்தப் படையோடுதான் வருவார், போவார் அழகிரி. அண்ணனை ஒரு கொசு கடித்தாலும் மதுரை கோரிப்பாளையமே பத்திக்கிட்டு எரியும். அழகிரியை அழகிரி என்று யாரும் அழைத்துவிட முடியாது. எதிர்கட்சிகள் ‘அ’னா எனவும், சொந்த கட்சியினர் ‘அஞ்சா நெஞ்சன், அஞ்சா நெஞ்சர்’ எனவும்தான் அழைப்பர்.
இவர்களின் ராஜ்ஜியத்தை கண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்த அந்த கடைக்கோடி கன்னியாகுமரி வரை மிரண்டு துடிக்கும். அழகிரி அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவரைச் சுற்றி இருக்கும் நபர்கள் செய்யும் காரியங்களை பார்த்தால் பதறி துடித்துவிடுவீர்கள். மாஜி அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு என்று தமிழகத்தை தெறிக்கவிட்ட கைங்கர்யங்களை நிகழ்த்தியவர்கள். அதிலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் இவர்களின் ஆட்டத்துக்கு அந்த கள்ளழகரே கடுப்பாகிவிடுவார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும், அழகிரி மத்தியமைச்சராக இருந்த போதும் இந்த பரிவாரங்கள் செய்த பரிபாலனங்கள் அம்மாடியோவ் ரகங்கள்.
ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் தேர்தலில் அழகிரிக்கு ஏற்பட்ட தோல்வியும், தி.மு.க. ஆட்சியை இழந்ததும், ஸ்டாலினுடனனான உள் அதிகார மோதலால் அழகிரி கட்டங்கட்டப்பப்பட்டதும், ஸ்டாலின் மேலிருக்கும் கடுப்பில் தேர்தலில் கட்சிக்கு எதிராக அழகிரியும், அவரது மகன் துரையும் ஆடிய ஆட்டங்களும் எல்லாம் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் அவரை கட்சியிலிருந்தே நீக்கின.
என்னதான் அழகிரியின் ஜாதகம் அதிரடி என்றாலும் கூட கடும் இக்கட்டுக்களுக்கு நடுவில் தெற்கே கட்சியை வளர்த்தெடுத்தவர் அவர்தான். அதனால்தான் கருணாநிதி அவரை விட்டுக் கொடுக்க தயங்கினார். ஆனால் ஸ்டாலினின் வர்புறுத்தலும், அழகிரியின் பக்க கரங்களாக இருந்த பொட்டு சுரேஷ் அதே டீமை சேர்ந்த அட்டாக் பாண்டி தரப்பால் கொல்லப்பட்டு கட்சியின் பெயர் டேமேஜ் ஆனதாலும், தொடர் கட்சி விரோத செயல்பாடுகளாலும் அழகிரிக்கு எதிரான இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது தலைமைக்கு.
அதன் பிறகு தேர்தல் காலங்களில் ஸ்டாலின் எடுத்த முடிவுகளை ‘இது தேறாது’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அழகிரி. அவர் சொன்னது போலவே ஸ்டாலினால் பாதி கிணறுதான் தாண்ட முடிந்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் நெடுங்காலமாக கோபாலபுரம் பக்கம் வராமலிருந்த அழகிரி, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது அண்ணன் பேரனின் திருமணம் கோபாலபுரம் இல்லத்தில் நிகழ்ந்த போது அங்கே வந்து குடும்பத்தோடு ஆஜரானார். ஸ்டாலின் சென்னையில் இல்லாத நிலையில், ஸ்டாலின் டீம் அடக்கி வாசித்த நிலையில் அன்று அழகிரி டீம் டோட்டல் கோபாலபுரத்தையும் குத்தகைக்கு எடுத்து ஆடியது.
அதன்பிறகு சில நாட்கள் சைலண்ட் ஆன அழகிரி, இப்போது மோடி தன் தந்தையை பார்த்துவிட்டு சென்றதற்காக நன்றி கடிதம் எழுதி மெதுவாக தீவிர அரசியலுக்குள் தலைகாட்ட துவங்கியுள்ளார். இது போதாதென்று ‘தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
அழகிரியின் இந்த அதிரடி அறிவிப்பு ‘நான் கட்சிக்குள் மீண்டும் வர தயார்! இணைத்துக் கொள்ளுங்கள்’ என்பதே ஆகும். அண்ணன் அழகிரியின் இந்த மூவ் ஸ்டாலினுக்கு உற்சாகத்தையும் கொடுக்கவில்லை, உதறலையும் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் அழகிரி மீண்டும் வந்தால் தென் தமிழக தி.மு.க.வுக்கு கிடைக்கபோகும் நல்லது, கெட்டது என்னென்ன? என்று கணக்குப் போடுகிறார்.
இந்நிலையில் அழகிரியின் இந்த ரீ எண்ட்ரி முயற்சி தெற்கு தி.மு.க.வின் பல முக்கியஸ்தர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறதாம். ஸ்டாலின் இருக்கும் தைரியத்தில் மதுரை மாநகரிலேயே அழகிரியை அழைக்காமல் கூட்டம் போடுவது, அவர் பெயரே இல்லாமல் போஸ்டரடிப்பது என்று ஆரம்பித்து அவரை முழுக்க முழுக்க புறக்கணித்து ஒட்டுமொத்தமாக தள்ளி வைத்துவிட்டனர். இந்நிலையில் குடும்ப நெருக்கடியால் அழகிரியை மீண்டும் சேர்த்தால் அது தங்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பில்லை என்று மிரளும் அவர்கள்...
‘அழகிரி உள்ளே வந்தால் நாங்கள் கட்சியை விட்டு வெளியே போவோம்.’ என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்களாம்.
இந்த திடீர் போர்க்கொடி செயல் தலைவரை செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது.