கல்வியும் பொதுப்பட்டியலில்தான் இருந்தது. ஆனால் யாரையும் கேட்காமல் நீட் த்தேவை கொண்டு வந்தவர்கள் இந்த சட்டத்திற்கு எல்லோரிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று காலம் கடத்துகிறார்கள்.
கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், சாதிக் கலப்பு நடந்து விடவே கூடாது என சாதி மேட்ரிமோனிகள் செயல்பட்டு வருகிறது என்றும், அவைகளை ஒழித்தே ஆகவேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
சாதிவெறி சண்டைகள், சாதி தீண்டாமை, அதனால் சாதி இழிவு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமூகத்தில் வர்க்க ஏற்றத் தாழ்வுகளைக் கலையவும், சாதி தீண்டாமையை ஒழிக்கவும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அரசுகள் அறிவித்து வருகின்றன. அடக்கப்பட்டவர்களை, வஞ்சிக்கப்ப ட்டவர்களை கைதூக்கி விடும் விதமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதேபோல சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு குறிப்பாக தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதைவிட ஒரு படி மேலே சென்ற உச்ச நீதிமன்றம், காதல் கலப்பு திருமணம் செய்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும், அதை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும் ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது.
undefined
ஆனாலும் வட இந்தியாவில் சில பகுதிகளில் இன்றளவும் கலப்பு திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்து வருகிறது. சாதிமறுப்பு திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவது, கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் அவர்களைப் பிரிப்பது, இல்லையென்றால் ஆணவப்படுகொலை செய்வது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இதே போன்ற பாணியில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஆணவ படுகொலைகள் நிகழ்ந்து வருகிறது. சாதி வெறியர்களால் உடுமலைப்பேட்டை சங்கர் நடுரோட்டில் வெட்டி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை தமிழகமே அறியும். இது அனைத்துமே சாதி விட்டு சாதி திருமணம் நடந்துவிடக்கூடாது, சாதிக் கலப்பு நடந்து விடக்கூடாது, அப்படி நடந்தால் அது சாதி கட்டமைப்பை உடைத்து விடும் என்ற அச்சத்தால். சாதி பெருமையால் இதுபோன்ற வன்முறைகள் அரங்கேறி வருகிறது. சாதி கட்டமைப்பைத் கட்டிக் காக்கும் வகையில் சில சாரி அரசியல் கட்சிகளும் இதற்கு காரணமாக இருக்கின்றன.
இது ஒருபுறம் இருந்தாலும் இப்போது ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மேட்ரிமோனி நிறுவனங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. சமூகத்தில் சாதி வேற்றுமை கலைப்பட வேண்டுமென்றால் சாதிக் கலப்பு நிகழவேண்டும், தன்னியல்பாக சாதி மாறி நடக்கும் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், தங்கள் சாதிக்குள்ளாகவே திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சாதி மேட்ரிமோனிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மேட்ரிமோனியில் ' நமது தோட்டத்து மலரை நாம் நுகரலாம் ' என விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு சாதிக் கட்டமைப்பை கட்டிக்காக்கும் மையங்களாக ஆகவே இந்த மேட்ரிமோனிகள் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் உள்ளது. இந்த வரிசையில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, இந்த சாதியை ஊக்குவிக்கும் கட்டமைப்புகள் கலையப்பட வேண்டும் என பேசியுள்ளார்.
ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய அவர், சாதி ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் மிகவும் விவாதிக்கப்படுகிறது விஷயமாக இருந்து வருகிறது. அதை மேலும் கூர்மைப்படுத்தி விவாதத்திற்கு உட்படுத்திய பெருமை சாதி ஒழிப்பு முன்னணி இயக்கத்தோழர்களை சாரும். மொத்தத்தில் சாதியின் ஆணவப்படுகொலை தடுக்கு தனிச் சட்டம் அவசியமான ஒன்றாக உள்ளது. இது குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்கான தனி சட்டத்தை இயற்றித் தரச்சொல்லி சட்ட ஆணையத்திடம் கேட்கப்பட்டது. அந்த ஆணையமும் 2012 ஆம் ஆண்டு தனி சட்டத்தை இயற்றி கொடுத்திருக்கிறது. இப்போதும் அது நாடாளுமன்றத்தில் இருக்கிறது. ஆனால் அது பொதுப்பட்டியலில் இருக்கிறது, எனவே எல்லா மாநில அரசுகளுடனும் அதுகுறித்து கருத்து கேட்டு பின்னரே சட்டம் நிறைவேற்றப்படும் என கூறுகிறார்கள்.
கல்வியும் பொதுப்பட்டியலில்தான் இருந்தது. ஆனால் யாரையும் கேட்காமல் நீட் த்தேவை கொண்டு வந்தவர்கள் இந்த சட்டத்திற்கு எல்லோரிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று காலம் கடத்துகிறார்கள். இந்த சட்டம் வந்தால் தான் சாதி ஆணவக் கொலைகளை தடுக்கமுடியும். இந்த சாதி ஆணவக் கொலைகளுக்கு பெற்றோர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதை விட, சாதி சங்கங்கள் தான் காரணமாக இருக்கிறது. அவர்கள்தான் அதுபோன்ற ஆணவக் கொலைகளை ஊக்குவிக்கின்றனர். அல்லது சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்களின் பெற்றோர்களை கேலி செய்கின்றனர், கிண்டல் செய்கின்றனர், ஏளனம் செய்கின்றனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்களின் கருத்துக்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்போது இந்த சாதி சங்கங்களை போலவே சாதிகளை கட்டிக் காப்பாற்றும் அமைப்புகளாக மேட்ரிமோனிகள் இருந்து வருகின்றன.
முதலில் தமிழ் மேட்ரிமோனி என்றுதான் வந்தது. இப்போது ஒவ்வொரு சாதி பெயரிலும் மேட்ரிமோனி வருகிறது. வேற சாதியில் திருமணம் செய்யாதீர்கள் என்பதை இவர்கள் நாசுக்காக ' நம்முடைய தோட்டத்தில் பூத்த பூக்களை நுகரலாம்' என்ற வாசகங்களுடன் விளம்பரம் செய்கிறார்கள். இதெல்லாம் தடை செய்யப்பட வேண்டும். இந்த மேட்ரிமோனிகள், வேறு எந்த ஜாதியிலும் திருமணம் செய்து விடாதே... உன்னுடைய சாதியிலேயே மாப்பிள்ளை பார்க்கிறேன்.. பெண் பார்க்கிறேன் என்று சாதியை காக்கும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.