
பாஜக தொண்டர்களை ஏவி விட்டால் ஐந்து நிமிடத்தில் திமுகவை துவம்சம் செய்து விடுவார்கள் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆவேசம் தெரிவித்துள்ளார், இந்தியாவிலேயே 18 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக கட்சி பாஜகதான் என்றும் அவர் திமுக அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக திமுக அரசின் ஒவ்வொரு திட்டங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் அதிமுகவை காட்டிலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் தொடங்கி அமைச்சர் பெருமக்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அண்ணாமலையில் தொடர் விமர்சனம் திமுக அமைச்சர்கள் எரிச்சலடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக வந்து காவல் துறையில் சேர்ந்து ரவுடிகளை கைது செய்து சிறையில் போட்டதை விட பாஜகவில் சேர்ந்து ரவுடிகளை கட்சியில் சேர்த்தது தான் அதிகம்.
அண்ணாமலை போன்று தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தமிழக அரசையும் தமிழக முதலமைச்சர் விமர்சித்து வருகின்றனர். நான் கேட்கிறேன் தமிழக முதல்வரை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. வேண்டுமென்றால் அண்ணாமலை மோடியிடம் போய் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லட்டும், பாஜகவின் திட்டங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது, அதற்கு வேறு மாநிலத்தை பாருங்கள் என கூறியதுடன், திமுக அரசை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமையில் அவன் இவன் என்று பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பாஜகவினரை கொந்தளிப்பு அடைய செய்துள்ளது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் தன்னை விமர்சித்த தா.மோ அன்பரசன் அவர்களுக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் வைத்து அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அந்தவகையில் நாமக்கல்லில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை பேசியிருப்பதாவது:- திமுக அமைச்சர்கள் ஒரு வருடகாலமாக கெட்ட வார்த்தை பேசாமல் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன், ஆனால் அண்ணன் அமைச்சர் அன்பரசன் அவர்கள் என்னை பொறுக்கி எனக் கூறியிருக்கிறார். நான் பொறுக்கி தான், திமுகவின் ஊழலை பொறுக்க கூடிய பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கக் கூடிய பொறுக்கி, அவர்கள் செய்கின்ற தவறுகளை பொறுக்கி மக்கள் மத்தியில் வைக்கிறேன். அதற்கு பொறுக்கி என ஒரு பட்டம், அதை தயவு செய்து கொடுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் என் தொண்டர்களை மட்டுமே விட்டேன் என்றால் ஐந்து நிமிஷத்தில் திமுகவை துவம்சம் செய்து விடுவார்கள். அன்பரசன் அவர்களுக்கு நான் ஓன்று சொல்லிக்கொள்கிறேன், பாரதிய ஜனதா கட்சியில் 18 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதனால் சும்மா இந்த 23 வயசு சின்ன பசங்க, சில்வண்டுகளின் வைத்துக்கொண்டு துண்டை போட்டுக்கொண்டு தொண்டர்களை வைத்து இருக்கிறேன் என்றெல்லாம் நீங்கள் செல்லாதீர்கள். பைக்கில் பர்ரு டுர்ரூன்னு போற பசங்களை எல்லாம் தொண்டர்கள் என கூறி தயவுசெய்து கூப்பிட்டு கொண்டு வராதீர்கள், அது வேற மாதிரி ஆகிவிடும். எப்போதும்கூட நாங்கள் வன்முறையை நிச்சயமாக கையில் எடுக்கமாட்டோம், வன்முறை மீது நம்பிக்கை இல்லாத கட்சி பாரதிய ஜனதா கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.