2024-ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... திருமாவளவன் போலவே எச்சரிக்கும் மாஜி முதல்வர்.!

By Asianet TamilFirst Published Dec 26, 2021, 9:31 PM IST
Highlights

 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்?

வரும் 2024-இல் பாஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதலில் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் வகையில்,  ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் போபால் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் கலந்து கொண்டார். 

இந்தப் போராட்டத்தில் திக்விஜய் சிங் பேசுகையில், “இந்துத்துவாவுக்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வீர சாவர்க்கர் தன்னுடைய புத்தகத்தில், இந்து மதத்துக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல,  வீர சாவர்க்கர் பசுவை ஒரு போதும் மாதாவாகக் கருதவில்லை. மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் போராட்டமானது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் உள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதலில் அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள். பிறகு இடஒதுக்கீட்டையே முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள்.” என்று திக்விஜய் சிங் பேசினார்.

2024 தேர்தலில் மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன. இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘ 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்? இதை நினைக்கும்போதே எனக்கு அச்சமாக உள்ளது. ” என்று பேசியிருந்தார். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் அதுபோலவே பேசியிருக்கிறார்.
 

click me!