Tamilnadu Floods: எந்த பிரச்சனை என்றாலும் கூப்பிடுங்க.. எந்த நிலையிலும் வருவோம்.. தெறிக்கவிட்ட சைலேந்திர பாபு.

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2021, 1:57 PM IST
Highlights

குறிப்பாக 75 ஆயிரம் பேர் அடங்கிய காவல் நிலைய அதிகாரிகள் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் வரும் நாட்களில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்குப் பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழையானது கொட்டித் தீர்த்து பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க காவல்துறை, பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் நிவாரண உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் மாநிலம் முழுவதும் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் தமிழக காவல்துறை மூலம் வரவுள்ள பெருமழையை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 75 ஆயிரம் பேர் அடங்கிய காவல் நிலைய அதிகாரிகள் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை, சிறு படகுகளுடன் (Kayak) 350 கடலோர காவல் படை வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளை சரி செய்ய 250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினர், 10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி, பெற்ற ஊர்க்காவல் படையினர் என தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், பொது மக்கள் அனைவரும் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்க தமிழக காவல் துறையின் பொது அறிவுரைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும், அவசர உதவிக்கு காவல்துறையின் 100 என்ற எண்ணையும், தீயணைப்புப் துறையின் 101 என்ற எண்ணையும், பொதுவான அவசர உதவிக்கு 112 என்ற எண்ணையும், அவசர ஊர்தி தெர்வைக்கு 108 என்ற எண்ணையும், காவல் கட்டுப்பாட்டு அறையை அணுக TOTT 044 24343662, 044 24331074, 044 28447701, 044 28447703 (தொலைநகல்) ஆகிய எண்களையும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் சென்னையில் வாழும் பொதுமக்கள் மாநகர காவலின் பொது மக்கள் குறை தீர்ப்பு பிரிவை அணுக 044 23452380 என்ற எண்ணையும், மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 044 23452359 என்ற எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த அவர், நாளை நாளை மறுநாள் அதிகமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, சேட்டிலைட் மூலமாக மிகத் துல்லியமாக கணித்து அது தெரிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் உடனடியாக எடுத்திருந்தாலும், குறிப்பாக குழந்தைகள் இடி இடிக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் வெளியில் வரக்கூடாது. நீர்நிலைகள் பக்கத்தில் போக கூடாது, மின்சார கம்பங்கள் பக்கத்தில் போகக்கூடாது, ரோட்டில் இருக்கிற மின்கம்பங்களை தொடக்கூடாது இது மிகவும் முக்கியமான அறிவுரை, குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதேபோல கிராமப்புறங்களில் ஓடைகளில், ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்றால் அது அருகில் செல்லக்கூடாது. நிலைகளில் இறங்க கூடாது, முட்டிகால் அளவுக்கு தண்ணீர் இருந்தால் கூட அது நம்மை இழுத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது, இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபயம் உள்ளது, எனவே அதை தவிர்க்க வேண்டும் என்றும், அதேபோல நமது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும், 

2015 வெள்ளத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் சேதமானது, எனவே வீதிகளில் உள்ள மோட்டார் சைக்கிள் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்தி வையுங்கள் என தெரிவித்துள்ளார். தாழ்வாற பகுதியில், தரைதளத்தில்  உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மத்தியில் எந்த சிரமம் ஏற்பட்டாலும் உடனே 100 என்ற எண்ணில் காவல்துறையினரும், 101 தீயணைப்பு துறைக்கும் 108 ஆம்புலன்ஸ், 112 என்ற என்களுக்கும் அழைக்கலாம், எல்லா பகுதியிலும் காவல்துறையினர், அதிரடிபடை வீரர்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக உங்களிடத்திற்கு வருவர் என்றும், மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!