ரெய்டுக்கெல்லாம் பயந்திருந்தால் திமுக என்றைக்கோ செத்துப்போய் புல் முளைத்திருக்கும். கெத்துகாட்டும் துரைமுருகன்

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2021, 2:48 PM IST
Highlights

மொத்தம் நான்கு இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக வேட்பாளர் ஏ.வா வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் திமுக அஞ்சாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக  சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளது. இந்நிலையில் அதிமுக-திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் கால் பதிக்க போராடும் பாஜக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலாவது இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்துக்கு நுழைந்துவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவுடன் இணைந்து இத்தேர்தலை சந்தித்தாலும் தனக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பாஜக மற்றும் திமுக காங்கிரஸ் அணிகளுக்கு இடையே தீவிர போட்டி நிலவி வரும் நிலையில்,  சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மொத்தம் நான்கு இடங்களில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக வேட்பாளர் ஏ.வா வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணப் பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை இச்சோதனை நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வருமான வரி துறையின் சோதனை குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது. ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்துப்போய் புல் முளைத்திருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறியுள்ளார்.

 

click me!