எங்க டாடி குதிருக்குள் இல்லை... வாண்டடாக வந்து வண்டியில் ஏறிய 2 அமைச்சர்கள்..!

By Selva KathirFirst Published Jul 26, 2019, 10:43 AM IST
Highlights

சிலை கடத்தல் விவகாரத்தில் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் வந்து இரண்டு அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.

சிலை கடத்தல் விவகாரத்தில் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் வந்து இரண்டு அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த போது செய்யாத விஷயங்களை எல்லாம் சிறப்பு அதிகாரியான பிறகு அதிரடியாக செய்து வருகிறார் பொன் மாணிக்கவேல். அந்த வகையில் அறநிலையத்துறையின் உயரதிகாரிகளை கம்பி எண்ண வைத்த அவர் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளிநாடுகளில் இருந்து சிலையை மீட்க விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார். 

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதன்கிழமை அன்று ஒரு குண்டை தூக்கி போட்டார் பொன் மாணிக்கவேல். அதாவது சிலை கடத்தல் விவகாரத்தில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் கூறி அதிர வைத்தார் பொன் மாணிக்கவேல். உடனடியாக அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யும் படி நீதிபதி கூற, தாராளமாக என்று கூறி மிரள வைத்தார். 

இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் கூறிய அமைச்சர்கள் 2 பேர் யார் என தமிழகத்தில் பெரிய பட்டிமன்றமே நடைபெற்றது. அவர்கள் பெயரை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் பேச முடியாது என்று ஜெயக்குமார் நழுவிச் சென்றார். 

இந்த நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பொன் மாணிக்கவேல் சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் எங்களுக்கு தான் இதில் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியிடுகிறார்கள். எங்களுக்கும் சிலை கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதறியபடி பேட்டி அளித்துள்ளனர்.

 

பொன் மாணிக்கவேல் பெயரை வெளியிடுவதற்குள் செய்திகள் வெளியானதாக கூறி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் பதறியிருப்பது எங்க டாடி குதிருக்குள் இல்லை என்கிற கதையை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டுவருகிறது. அதே சமயம் தங்கள் மீதான அபாண்ட புகாருக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சிலை கடத்தல் வழக்கை மையமாக வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய சூறாவளி வீசுவது உறுதி என்பது மட்டும் தெரிகிறது.

click me!