
சென்னை: திமுகவை ஆட்சி கட்டிலிலும் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியிலும் அமர வைப்பதே தன்னுடைய நோக்கம், ஸ்டாலினை முதல்வராக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட முடிவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்; தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று சிலர் சொல்வதை என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்தவே நான் இங்கு வந்துள்ளேன்.
என்னை ராசியற்றவன் என்று சிலர் கேலி பேசுகிறார்கள், அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. தி.மு.கவுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவன் நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டவர் கருணாநிதி.
சங்கரன்கோயிலில் தி.மு.க-வை வெற்றிபெறவைத்ததற்கு பரிசாக ராஜ்யசபாவுக்கு என்னை அண்ணன் கலைஞர் அனுப்பிவைத்தார். அதேபோல, மயிலாடுதுறை இடைத்தேர்தலில் நானும் கோ.சி.மணியும் இணைந்து திமுகவிற்கு வெற்றியைத் தேடித்தந்தோம். அதற்குப் பின், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவியை தி.மு.க-வில் கொடுத்தார்கள். கருணாநிதிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்டது அப்பனுக்கும் பிள்ளைக்குமான மோதல் போன்றதுதான். கருணாநிதிக்கு எப்படி பாதுகாப்பு அரணாக இருந்தேனோ இதே போன்று ஸ்டாலினுக்கும் அரணாக இருப்பேன். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று நான் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால், எந்தப் பதவியையும் தேடி திமுக கூட்டணிக்கு நான் வரவில்லை. திமுகவிற்கு ஒரு ஆபத்து என்றால், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்று இவ்வாறு வைகோ பேசினார்.