உன்னை எவ்ளோ பெரிய இடத்தில் உட்கார வைச்சுருக்கேன்.. கருணாநிதி சொன்னது பற்றி ஸ்டாலினின் மலரும் நினைவுகள்.!

By Asianet TamilFirst Published Sep 8, 2021, 8:38 AM IST
Highlights

சென்னை மேயராகப் பதவியேற்றது பற்றியும் அப்போது கருணாநிதி கூறியது பற்றியும் சுவையான மலரும் நினைவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
 

'சிங்காரச் சென்னை 2.0' மற்றும் தூய்மை பணிகளுக்காக பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் விழா சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “ரிப்பன் மாளிகைக்குள் நுழையும் போது என் நினைவு 1996-க்கு சென்றுவிட்டது. அப்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயராக என்னைத்  தேர்ந்தெடுத்து பணியாற்ற சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். மேயர் என்றால் பெரிய அங்கி, நூறு பவுன் செயின், செவர்லெட் கார் போன்றவைதான் அடையாளம். 
அந்த அங்கியைப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகள், விழாக்களுக்குச் செல்வது, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வது ஆகியவைதான் மேயரின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மக்கள் பணியாற்றுவதே மேயரின் வேலை என்பதை நிறைவேற்றும் வகையில் கடமையைச் செய்தேன். இந்தச் சாலை வழியாகப் போகும்போதெல்லாம் ரிப்பன் பில்டிங்கை பார்த்துகொண்டே செல்வேன். இதைப் பார்க்கும் போதெல்லாம் மேயராக வெற்றி பெற்றதுதான் நினைவுக்கு வரும். அப்பொழுது பொறுப்பேற்பதற்காக இதே ரிப்பன் பில்டிங்கில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு அழைப்பிதழ்கள் தயாராகி, அதைக் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தோம். 
96ல்  திமுக ஆட்சிக்கு வந்தபோது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று நம்முடைய தோழர்கள் கலைஞரிடம் போய் சொன்னார்கள். ஆனால், கலைஞர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அப்போது அந்தப் பதவியை விரும்பவில்லை. பிறகு மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மேயரானேன்.  அப்போது கலைஞர் என்னிடம், “எல்லாரும் சேர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால், நான் உன்னை எவ்வளவு பெரிய பில்டிங்கில் உட்கார வைத்திருக்கிறேன்” என்று கலைஞர் பெருமையாகச் சொன்னார்.” என்று மலரும் நினைவுகளை பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
 

click me!