நேராக சுவாமிமலைக்குச் சென்றேன். அங்கு ஓபிஎஸ் அவர்களையும், ஈபிஎஸ் அவர்களையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், சுவாமி மலைக்குச் சென்றது பற்றி ஜெயலலிதாவின் உதவியாளர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நெடு நாட்களாக வெளியூருக்கு போகவில்லை. கோயிலுக்கு செல்லும் மனமும் இல்லை. தற்போது நல்ல வாய்ப்பு மலர்ந்தது. நேராக சுவாமிமலைக்குச் சென்றேன். அங்கு ஓபிஎஸ் அவர்களையும், ஈபிஎஸ் அவர்களையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் வருவதை ஓபிஎஸ் ரசிகரிடம் தெரிவித்தேன். அவர் சென்று ஈபிஎஸ் ஆதரவாளரிடம், உங்களைக் காண பூங்குன்றன் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க;- உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்
நீங்கள் கூட்டத்தோடு வருவீர்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்களே! நீங்கள் எப்போதும் எளிமை தான் போங்க.. என்றார் தம்புடு. பிறகு ரசிகரும் வந்தார். அவர்கள் இருவரின் உபசரிப்பில் உள்ளம் மகிழ்ந்தேன். அன்பால் மூவரும் கலந்தோம். அம்மாவின் பிள்ளைகளாய் இணைந்தோம். அரசியல் பேசி சிரித்தோம். பிறகு என் அப்பனை காணச் சென்றேன். அழகன் முருகனைக் கண்டேன். அதிசயத்து நின்றேன். உயரமான உருவம், ஆஜானுபாகுவான உடல், அழகிய முகம் என கம்பீரமாய் காட்சி தந்தான் முருகன். சுவாமிமலையில் எப்போதும் எளிமையாய் காட்சி தருவான் முருகன். ஆனால் சில நேரங்களில் தங்க அலங்காரத்தோடு, வைர வஜ்ரவேலை தாங்கி அவன் நிற்கும் காட்சி என்னை வியக்க வைத்திருக்கிறது. நீங்களும் அந்த காட்சியில் எப்போது முருகன் வருவான் என்று கேட்டு, பாருங்கள் உங்கள் உள்ளமும் கந்தன் அழகில் சொக்கிப் போகும்.
தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு கடல் அலை என திரண்டு வந்த கூட்டம் சற்று அடங்கியிருந்தது. அதுவே எனக்கு வசதியாகப் போனது. நெடு நேரம் அமர்ந்து அவன் அழகை கண் குளிரக் கண்டேன். உள்ளம் உருகி நின்றேன். முருகனுடைய மந்திரங்களை கேட்டு மெய் மறந்த போது, தீபாராதனை காட்டப்பட்டது. முருகனின் அழகை அந்த தீப ஒளி வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாய் காஞ்சி காமாட்சி எப்படி கண்களை உருட்டிப் பார்ப்பாளோ! அதுபோல ஆறுமுகன் வந்திருப்பவர்களை பார்த்தது தெரிந்தது. சுவாமிநாதனின் வசீகரம் என்னைக் கவர்ந்தது. என்னை மட்டுமா? உங்களுடைய கவனத்தையும் காந்தம் போல அவன் ஈர்க்கவே செய்வான். நிரம்பிய மனதோடு தரிசனம் முடித்து இறங்கி வந்தேன்.
தம்புடு அவர்களின் கடையில் நெடுநேரம் சங்கரோடு இணைந்து நடப்பவற்றையும், நடந்தவற்றையும் பகிர்ந்தோம். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரொடும் சென்று ஆனைமுகனை வணங்கினேன். மன்னிக்கவும் தம்புடுவோடும், சங்கரோடும் சென்று ஆனைமுகனுக்கு பேரிச்சம் பழத்தை ஊட்டி உள்ளம் மகிழ்ந்தோம். அன்னபூரணியின் பிள்ளைகள் ஒன்று சேர ஊட்டியது ஆனைமுகனுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் போல, ஆனந்தமாய் எங்களுக்கு அருளாசியை வழங்கியது. மனம் கலந்தோம். உற்சாகம் அடைந்தோம். பேறு உவகை கொண்டோம்.
இதையும் படிங்க;- அம்மா எல்லா பதவியும் வழங்கிட்டாங்க!OPS விரும்புவது பதவியல்ல இதுதான்!பூங்குன்றனிடம் வேதனையை பகிர்ந்த ஜெயபிரதீப்
என் புகழ் பாடினாலும், வசைபாடினாலும் நீங்கள் எல்லோரும் எனக்காக அம்மா விட்டுச் சென்ற உறவுகள். உங்களை பிரித்து பார்க்கும் எண்ணம் எனக்கு எழவில்லை. அதை என் மனம் விரும்பவும் இல்லை. எனக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் அனைவரோடும் இணைந்திருக்கவே நான் விரும்புகிறேன். பின்னர் அந்த நல்ல உள்ளங்களிடமிருந்து விடைபெற்று, முருகன் மாமனோடு துர்க்கா அம்மாவை காணச் சென்றேன் என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார் .